'இது' மட்டும் நடக்கலைனா.. தமிழ்நாட்டு மக்களின் நிலைமை அவ்ளோதான்.. பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா டென்ஷன்
பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையெனில் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் கிடையாது என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்
தூத்துக்குடி: பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையெனில் தமிழ்நாட்டுக்கு 'விடிவு காலமே' கிடையாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.
நேற்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் முடிவுற்ற நிலையில், பட்ஜெட் தொடர்பாக பாஜக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தை சில இடங்களில் நடத்தி வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச். ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு மீதும் திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை. திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் வால்கள் ஒட்ட வெட்டப்படும். மறுபுறம் இக்கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு பாரமாக இருக்கிறது.

நீலிக்கண்ணீர்
அதாவது புதுச்சேரியில் தமிழ் பேராசிரியர்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ரூ.20 ஆயிரம்தான் வழங்கப்படுகிறது. இதுவே இவர்கள் தமிழ் மொழியை எந்த அளவுக்கு வளர்க்கிறார்கள் என்பதற்கு உதாரணமாகும். ஆனால் தமிழ் மொழி வளர்ப்பு குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். திமுகவினர் பலர் என்னை பிகாரி என விமர்சிக்கின்றனர். ஆனால் மாநில நிதியமைச்சர் பட்ஜெட் உரையை தமிழில்தான் படித்தாரா என்று கேள்வியெழுகிறது. ஒருவேளை தாய் மொழிக்கு உயிர் இருப்பின் இந்த அவலத்தை கண்டு அழுதுவிடுவாள். இப்படியாக தமிழை அவமதித்த அமைப்பு திமுக.

பிரதமர் மோடி
திமுகவும், திகவும் தமிழ் விரோதிகள். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்கு சிலை வைத்ததால் இவர்களும் தமிழ் விரோதிகள்தான். திமுக அரசுக்கு மாற்றாக மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெற்றிக்கு காரணம், மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்திலும் மக்களின் பங்களிப்பு இருக்கிறது. இதனால்தான் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற வருகிறது. தேசிய அளவில் தற்போது வரை சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும்.

30 இடங்கள்
மோடிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கவில்லையெனில் உங்களுக்கு உயர்வே கிடையாது. எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில்தான் இருக்கிறது. காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடிதான். எனவே இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 30 இடங்களை கைப்பற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.

கருப்புக்கொடி
இதற்கு முன்னதாக கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் திரண்ட விசிகவினர் கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எதிர்பார்க்காத ஹெச்.ராஜா திடீரென அதிருப்தியடைந்தார். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசிகவினரை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஹெச்.ராஜா அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.












Click it and Unblock the Notifications