எத்தனை நாள்யா கத்துவீங்க? நான் கொஞ்சம் திமிரு பிடித்தவன்! பிராமணர் பற்றிய கேள்வி.. அண்ணாமலை டென்ஷன்
தூத்துக்குடி: பாஜகவில் பிரமாணர்கள் அமைதியாக ஓரம்கட்டப்படுகிறார்களா?'' என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலடி கொடுத்தார். மேலும் நான் கொஞ்சம் திமிரு பிடித்தவன் தான். எத்தனை நாள்யா கத்துவீங்க. வேண்டுமென்றால் டெல்லி போங்க என கூறியது பிரஸ்மீட்டை பரபரப்பாக்கியது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛பிராமணர்களை அமைதியாக ஓரம்கட்டும் பணியை பாஜக செய்கிறதா? புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிலும் இது நடந்ததாக ஒரு பேச்சு உள்ளதே?'' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அண்ணாமலை விரிவாகவும், காட்டமாகவும் பதிலளித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: ‛‛புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் செங்கோலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சோழர் காலத்தில் இருந்து சைவ ஆதீனத்தில் இருந்து செங்கோல் வருகிறது. செங்கோலை கொடுப்பதற்கு ஆதீனங்களை அழைக்க வேண்டும். சைவ ஆதீனங்கள் அழைக்க வேண்டும். 21 ஆதீனங்கள் சென்றனர்.
இதுதவிர சிருங்கேரி மடத்தில் இருந்து மடாதிபதிகள் சென்றனர். அதனை சிலர் பார்க்கவில்லை. மேலும் சர்வமத பிரார்த்தனை நடந்தது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். கண்ணில் மஞ்சள்காமாலை இருந்தால் அப்படித்தான் குறையாக பார்ப்பார்கள். கட்சிக்குள்ளேயே சிலருக்கு அந்த வியாதி வந்துவிடுகிறது.
சிலபேர் இன்னும் பழம்பெருமை பேசுகின்றனர். 1930ல் பாஜக அப்படி இருந்தது. இப்படி இருந்தது என கூறி வருகின்றனர். பாஜக அனைவருக்கும் சொந்தமான கட்சி. அதனை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. இந்த கட்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவர், 2 பேரால் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக கட்சி இல்லை. இது ஒரு காட்டாற்று வெள்ளம்.
எத்தனை நாள்யா கத்துவீங்க.. டெல்லிக்கு கிளம்பி போங்க.. நான் வேண்டாம் என்றா சொல்கிறேன். இண்டிகோவில் குறைந்த விலையில் டிக்கெட் இருக்கு. லேட் நைட் டிக்கெட் எடுத்தால் ரூ.4 ஆயிரத்துக்கே இருக்கு.. என்ன முடியுமோ பண்ணுங்க. அண்ணாமலையை பொறுத்தமட்டில் இப்படித்தான் இருப்பான். அண்ணாமலைக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி.
தலைவராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பேன். தொண்டனாக இருந்தாலும் இப்படித்தான் இருப்பேன். ஊரில் போய் பசுமாடு, ஆட்டை பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன். அண்ணாமலை பாஜக தலைவராக வந்தவுடன் மாறிவிட வேண்டும் என்பது நடக்காது. தொண்டருக்காக இருக்கும் தலைவன் நான். கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என இருப்பவன் நான்'' என காட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications