'சில குடும்பங்களில் திட்டமிட்டு வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர்'.. வைகோ பரபரப்பு பேச்சு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ''உங்களது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா?'' என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்து பேசிய வைகோ கூறியதாவது:-
இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளுக்கு சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என போய் வந்தார். கட்சியை சேர்ந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல் கேட்டாலும் சென்று வந்தார். சிகிச்சைக்கு உதவி செய்து வந்துள்ளார். இது எனக்கு தெரியாது அதன்பின்னர் எனக்கு தெரியாமலே திருமண வீடுகளில் அவரது படத்தை சுவரொட்டிகளில் போட்டுள்ளனர்.

இப்படி போடக்கூடாது
இனிமேல் இப்படி போடக்கூடாது என அவர்களிடம் சொன்னேன். மாநாட்டு பந்தலில் அவர் படம் போடக்கூடாது என கூறினேன். அப்படி போடப்பட்டிருந்ததை அகற்றச் சொல்லி இருக்கிறேன். இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கூறினேன்.
நான் மகனை அரசியலுக்கு வரும்படி ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.

தொண்டர்கள் விருப்பம்
ஆனால் நான் மகனை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் வந்து விடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன் அதை மீறி இப்பொழுது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறி தொண்டர்கள் ''எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லா தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கு என அழைத்துக் கொண்டு போகின்றனர்''. இக்கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்'' என்று வைகோ கூறினார்.

அண்ணாமலைக்கு கண்டனம்
இதனை தொடர்ந்து மேலும் பேசிய அவர், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெங்களூரில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.இன்னும் அதே போலீஸ் பார்வையில்தான் பேசி வருகிறார் அரசியல் கொள்கை பற்றி அவருக்கு தெரியாது என்றார்.

தமிழகம் முதல் இடம்
குஜராத்தில் அதானி துறைமுகத்திலிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பா.ஜ.க தலைவர்கள் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறவில்லை என்ற கேள்விக்கு இதில் அவர்களே குற்றச்சாட்டில் இருக்கும் போது அவர்கள் எப்படி பதில் கூற முடியும் என்று வைகோ பதில் அளித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய முதல் இடத்தில் தமிழகம் இருக்கிறது என்று வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications