எதிர் வீட்டு பார்வதியோடு கள்ளக்காதல்! தங்கவேல்சாமியின் விபரீத முடிவு! போலீஸ் ஸ்டேசனில் கிடந்த கோலம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்திற்குள் பூச்சிமருந்து குடித்த கள்ளக்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்த நிலையில், தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் போலீசார் வழக்கம் போல் பணியில் இருந்த போது, திடீரென அங்கு வந்த இருவர் பூச்சிமருந்தை குடித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள குலசேகரன்பட்டினம் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி தற்கொலை
அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர். இந்த கார் குலசேகரன்பட்டினம் காவல்நிலையம் அருகே நின்றது. தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. இறந்தவர்கள் கயத்தாறு சாலைப்புதூர் தங்கவேல்சாமி, நெல்லை வண்ணார்பேட்டை பார்வதி என்பதும் தெரியவந்தது.
கள்ளக்காதல் ஜோடி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் தங்கவேல்சாமி, கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள் என குடும்பம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அங்கு எதிர்வீட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பையாவின் மனைவி பார்வதி உடன் பழக்கம் ஏற்பட்டது. சுப்பையா-பார்வதி தம்பதியருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலை
ஆனால், பார்வதி மற்றும் தங்கவேல்சாமி இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து பார்வதி தனது வீட்டிலிருந்து வெளியேறி தங்கவேல்சாமியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதனால் குடும்பத்தினர் இருவரையும் தேடி வந்துள்ளனர். இநிலையில், நேற்று காலை தங்கவேல்சாமி, பார்வதியை காரில் அழைத்து குலசேகரன்பட்டினம் சென்றுள்ளர். அங்கு "வீட்டிற்கு திரும்பினால் குடும்பத்தினர் நம்மை பிரித்து விடுவார்கள்" என மனஉளைச்சலுக்கு ஆளான அவர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
குலசேகரன்பட்டினம் போலீஸ்
தொடர்ந்து விஷம் குடித்த உடன் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு காரில் வந்து "நாங்கள் விஷம் குடித்து விட்டோம்... காப்பாற்றுங்கள்" என்று அலறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கவேல்சாமி, பார்வதி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications