16 வயது பள்ளி சிறுமி வாயில் விஷம் ஊற்றிய காதலன்.. 2K கிட்ஸ் காதல் விபரீதங்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பெற்றோர் திருமணம் செய்து தர மறுத்ததால் 16 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஜேசிபி ஆப்பரேட்டர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சம்பவங்களும், கடத்திச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் கடந்த மாதத்தில் சராசரியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பள்ளி சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளும் அவல நிலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உரிய கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க பள்ளிக்கல்வி துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 16 வயது சிறுமியை காதலித்த ஜேசிபி ஆப்பரேட்டர் அவரது வீட்டில் பெண் தராததால் சிறுமியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே செவல்குளம் காலனி தெருவைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவரது மகன் ஆன 22 வயது இளைஞர் வேல்முருகன் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

16 வயது சிறுமி
இந்த நிலையில் வேல்முருகன் அதே கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த சிறுமியுடன் வேல்முருகன் பல இடங்களில் சுற்றித் திரிந்து உள்ளார். செல்போன் வாட்ஸ் அப் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

பெற்றோர்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன் அவரது பெற்றோரிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார் ஆனால் சிறுமிக்கு 16 வயது நடப்பதால் தற்போது திருமணம் செய்து தர முடியாது என அவரது பெற்றோரும் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அன்று மாலை சிறுமியை தனியே அழைத்துச் சென்ற வேல்முருகன் தான் விஷம் குடித்ததோடு சிறுமிக்கும் விஷத்தை ஊற்றி உள்ளார் இதில் இருவரும் மயங்கி கிடந்த நிலையில் அருகில் இருந்தோர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
அங்கு இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக சிறுமியின் தாய் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 16 வயது சிறுமியை திருமணம் செய்து தர மறுத்ததால் சிறுமிக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications