வேட்டையன் படத்தில் சர்ச்சை காட்சி.. மொத்த கோவில்பட்டியும் கொந்தளிப்பில்.. களம் இறங்கிய கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாட்கள் தான் ஆகிறத. ஆனால் அதற்குள் படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த படத்தில் ஒரு காட்சியால் மொத்த கோவில்பட்டியும் கொந்தளிப்பில் இருக்கிறது.. வேட்டையன் படத்தில் வரும் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு ( அக்டோபர் 10-ந்தேதி) முன்பு வெளியானது. இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து ஆட்சேபனைக்குரிய காட்சி இடம் பெற்றுள்ளது. வேட்டையன் படத்தில் வரும் ஒரு காட்சியில் செய்திவாசிப்பாளர் செய்தி வாசிக்கும் போது, கோவில்பள்ளி காந்திநகர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக காட்டப்பட்டிருக்கும். இதற்கு கோவில்பட்டி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஏனெனில் கோவில்பட்டி காந்திநகரில் உள்ள அரசுப் பள்ளி அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமான பள்ளியாகும். மேலும் பள்ளி குறித்து நல்ல மரியாதை மக்களிடையே உள்ளது. இப்படியான சூழலில் பள்ளியை பற்றி அவதூறாக காட்டியதால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுஒருபுறம் எனில் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்தே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின்னரே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் என்னிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அந்தப் பள்ளி ஆரம்பத்தில் நடுநிலைப்பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்த போது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி இருந்தேன்.
மேலும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளும் அந்த பள்ளிக்கு செய்து கொடுத்துள்ளேன். இது சிறப்பான பள்ளி. பல்வேறு விருதுகளை வென்ற பள்ளியாகும். அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் பள்ளியாகும். அப்படிப்பட்ட பள்ளியை பற்றி வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா நிறுவனத்தின் நிர்வாகியுமான தமிழ்குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் உறுதி அளித்தார். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நான் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து வருகிறேன். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்" இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications