நான் தமிழன் இல்லை! எனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்ன அண்ணாமலை.. கனிமொழி விமர்சனம்
தூத்துக்குடி: அதிமுக - பாஜக இரண்டுமே ஸ்டிக்கர் ஒட்டுகிற கட்சிகள்தான். தேர்தல் முடிந்த பிறகு இரண்டு ஸ்டிக்கரும் ஒட்டிக் கொள்ளும் என தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பேசுகையில், மறுபடியும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய இன்னொரு தாய் வீடாக தூத்துக்குடி தொகுதி மாறி இருக்கிறது. சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்து இந்த தொகுதியின் வேட்பாளரான பிறகு தூத்துக்குடி தொகுதி மக்களின் அன்பு, பாசம் இந்த ஊரோடு என்னை கட்டிப் போட்டுள்ளது. அதனால் என்னுடைய சொந்த ஊரு தூத்துக்குடியா? சென்னையா? என்று தெரியாத அளவுக்கு இந்த மண்ணோடு நான் கலந்து இருக்கிறேன். இந்த மக்களோடு நான் ஒன்றாக உணர்கிறேன் என்றால் அது மிகையில்லை.
இந்த தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தூத்துக்குடி தொகுதி மட்டுமின்றி தமிழ்நாடு புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் மிக முக்கியமாக தமிழ்நாட்டை எதிர்க்கக்கூடிய தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ள ஒன்றிய பாஜக ஆட்சியை நாம் தூக்கி எறிய வேண்டும் என்பது நம்முடைய கடமை. வந்தவரையெல்லாம் வாழ வைக்கக்கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அன்பு மரியாதை: எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் அனைவரையும் நம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டு பாசத்தோடு அன்போடு மரியாதையோடு நடத்தக்கூடியவர்கள் தமிழர்கள். அது திராவிட இயக்கம் நமக்கு சொல்லித் தந்திருக்க கூடிய தமிழ் பண்பாடு. ஆனால் பாஜகவின் பண்பாடு என்னவென்றால் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஒரு பாஜக அமைச்சர் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழர்களை அவர்களது உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் ஒரு நிலை உருவாகி விடுமோ எனப் பயப்பட கூடிய அளவுக்கு மிக மோசமாக நம்மை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அந்த அமைச்சர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அண்ணாமலை என்ன சொன்னார்: இங்கே பாஜக தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்தபோது நான் தமிழனே இல்லை. எனக்கு தமிழ்நாடு பிடிக்காது. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமில்லை. நான் கர்நாடகத்தை சேர்ந்தவன். கன்னடத்துகாரன். கன்னடம் தான் என் மொழி. இங்கு இருக்கக்கூடிய மக்கள் தான் என் மக்கள் என்று சொன்னார். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சலுகைகள் எல்லாம் பெற்றுப் படித்துவிட்டு ஒரு பதவிக்குப் போய் ஒரு இடத்தில் பணியாற்றும் போது தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசக்கூடிய ஒருவர் தான் இன்றைக்கு பாஜகவில் தலைவராக ஆக்கப்பட்டு இங்கே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
மழை வெள்ளம்: இன்னொருத்தர் தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பேரிடர் வந்த போது இங்கு வரவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் கவலையோடும் கண்ணீரோடும் வீடுகளை இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது ஆறுதல் சொல்லக் கூட பிரதமர் வரவில்லை. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. ஆனால் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களிடையே வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மிரட்டிய பிரதமர் மோடி: திமுகவை அழித்து விடுவேன், ஒழித்து விடுவேன் என்றெல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். இது மாதிரி பேசிய பல பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அந்த மாதிரி பேசியவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னாலே பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்கக்கூடிய இடத்திலே இருப்பது திமுக.
உதவிக்கரம்: ஒன்றிய அரசு காசு, பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் ஒன்றிய பாஜக அரசு வரி போட்டு எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். திருப்பி கொடுங்கள் என கேட்டால் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என கேள்வி எழுப்புகிறார்கள்.
இயற்கை பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்மையெல்லாம் கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் பேசுகிறார். நம் மக்களைப் பற்றி அவருக்கு கவலையில்லை, அக்கறையில்லை. இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டிலே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலே இருப்பதற்குத் தகுதி உடையவர்களா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழிக்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டுக்கு எதையுமே செய்ய மனமில்லாதவர்கள் பாஜக ஆட்சியாளர்கள்.
வடஇந்தியா: ஆனால் வட இந்தியாவுக்கு மட்டும் பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இப்படித் தொடர்ந்து வஞ்சிக்கப்படக்கூடிய மக்கள் நாம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மணிப்பூர் வன்முறை இன்று வரை தீரவில்லை. அந்தப் பிரச்சனைக்குக் காரணம் பாஜகவின் மத அரசியல் தான். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் மத அரசியலைப் புகுத்தி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலத்தை எல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழலைத் தமிழ்நாட்டிலும் உருவாக்கி விட பாஜக கட்சியினர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து இங்கே பாஜகவுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
எடப்பாடிதான் காரணம்: அதிமுக பாஜக இடையே ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பார்கள். ஆனால் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்தனை மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரித்து வாக்களித்து அதையெல்லாம் வெற்றி பெறச் செய்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக என்பதை நாம் மறந்து விட முடியாது. அதிமுக பாஜக இரண்டுமே ஸ்டிக்கர் ஒட்டுகிற கட்சி. தேர்தல் முடிந்த பிறகு இரண்டு ஸ்டிக்கரும் ஒட்டிக் கொள்ளும். அதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் இரண்டு பேருக்கும் இங்கே வாய்ப்பில்லை, இடமில்லை என்பதை உணர்த்த வேண்டும். ஆகவே இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மறுபடியும் வெற்றி பெற்று உங்களோடு இருந்து பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு மறுபடியும் உருவாக்கித் தர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications