நேரில் அழைக்காத விஜய்! கையில் கொஞ்சம் பணம்! கருப்பு பையில் பெரியார் புத்தகம்! கரம் கொடுத்த கனிமொழி!
தூத்துக்குடி: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் எடுத்ததோடு பொறியியல் தரவரிசைப் பட்டியலிலும் முதல் மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாணவி நேத்ராவை நேரில் அழைத்து பாராட்டிய கனிமொழி எம்.பி., அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையையும் கையில் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மானவி நேத்ரா, இவர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்றதோடு பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியிலிலும் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.
அந்த வகையில் அந்த விழாவில் கலந்துகொள்ளத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 18 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நேத்ரா இடம்பெறவில்லை. எப்படி விடுபட்டார் எனத் தெரியவில்லை.
விஜய் மக்கள் இயக்கத்தினரால் மாணவி நேத்ரா புறக்கணிக்கப்பட்ட தகவலை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உடனடியாக நேத்ராவை நேரில் அழைத்து கையில் ஒரு காசோலையை கொடுத்து ஊக்கப்படுத்தினார். அதில் எவ்வளவு தொகை எழுதப்பட்டிருந்தது என்ற விவரம் இல்லை.
மேலும் கூடவே ஒரு கருப்பு பையையும் அதனுள் பெரியார் புத்தகங்களையும் மாணவி நேத்ராவுக்கு பரிசாக கொடுத்தார் கனிமொழி எம்.பி. தங்கள் மகளை விஜய் நேரில் அழைத்து ஊக்கப்படுத்துவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நேத்ராவின் பெற்றோர், கனிமொழி கொடுத்த கவுரவத்தால் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.












Click it and Unblock the Notifications