கொட்டிய மழையிலும் கனிமொழியின் மக்கள் களம் நிகழ்ச்சி! மத்தியில் திராவிட மாடல் ஆட்சி வரும் என பேச்சு!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இருப்பதை போலவே மத்தியிலும் விரைவில் திராவிட மாடல் ஆட்சி வரும் என கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் ஒன்றியத்தில், மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொட்டிய மழையிலும் சென்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கனிமொழி எம்.பி. பேசியதாவது, '' அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய ஒன்றாக, அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை மேம்படுத்தக் கூடியதாக, மக்களுடைய வாழ்க்கையை ஒரு வெற்றிகரமான வாழ்க்கையாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். அரசியல் என்ற பெயரிலே மக்களைப் பிரித்து மக்களுடைய நலத்திட்டங்களுக்கு எதிராக செயல்பாடு செய்து அந்த மக்கள் இடையே ஒரு வெறுப்பை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கக்கூடிய அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது எடுபடக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.''
''ஒரு காலகட்டத்தில் நாம் படிக்கக் கூடாது, குறிப்பா பெண்களுக்கெல்லாம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது. மேல்சாதியினர் என்று சொல்லக் கூடியவர்கள் மட்டும் தான் இந்த சமூகத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. மத்தவங்களுக்கு எல்லாம் படிக்க வாய்ப்பில்லை, வேலைக்கு போகிறதுக்கு வாய்ப்பில்லை, ஒன்றும் கிடையாது, இந்த சமூகத்தில் மரியாதையும் கிடையாது. ஆனால், இன்று அதிக இளைஞர்கள் இளம் பெண்கள் உயர்கல்வி பெற்றிருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திராவிட இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்.''
''அந்த வழியிலே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம் என்று கல்லூரியில் படிக்க கூடிய அரசுப் பள்ளியில் படித்திருக்கக் கூடிய பெண்களுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்காக, அது எந்த ஜாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் உயர் ஜாதியில் பிறந்து இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு என்று அந்த கல்விக்கான உதவியை செய்து இன்றைக்கு எல்லாருக்கும் படிக்கக்கூடிய வாய்ப்பு நல்ல வேலைக்கு போகக் கூடிய வாய்ப்பு உருவாக்கித் தந்தது தலைவர் கலைஞர். இப்படித் தொடர்ந்து கல்விக்காக சுயமரியாதைக்காக இந்த மாநிலத்தின் உரிமைக்காக போராடக்கூடிய இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்.''
''திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நம்முடைய முதல்-அமைச்சர் அடிக்கடி சொல்லுவது போல DRAVIDA MODEL (திராவிட மாடல்) திராவிட ஆட்சியைத் தான் இன்று மற்ற மாநிலங்களும், ஏன் ஒன்றிய அரசாங்கமும் பின்பற்றக் கூடிய ஒரு நிலையை உருவாக்கிக் காட்டி இருக்கிறோம். விரைவிலே அங்கேயும் ஒரு மாற்றம் வந்து, அங்கேயும் ஒரு திராவிட மாடல் ஆட்சி உருவாக கூடிய நிலை விரைவில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications