"ஆபரேஷன் 302".. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய ரிப்போர்ட்! இதான் நியாயம்.. கனிமொழி இப்படி சொல்றாங்களே?
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி ஆணைய அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் ஆகும். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்த ஒருவர் கனிமொழி.
இந்த சம்பவத்திற்கு பின் அவர் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தூத்துக்குடி விவகாரத்தில் பலியான மக்களுக்கு நீதி கிடைத்தே தீரும் என்று கூறியவர் கனிமொழி.

கனிமொழி
முக்கியமாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கனிமொழி கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்து இருந்தார். 2018ம் ஆண்டு இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கையை அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் காவல் துறையினருக்கும் உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய கொடுமையான காயங்களோ அல்லது கொடுங்காயங்களோ ஏற்படவில்லை.

காயம் இல்லை
திரு.மணிகண்டன் என்ற ஒரே ஒரு காவலர் தவிர. அவருக்கு ஏற்பட்ட காயம் கொடுங்காயம், அதாவது உதட்டில் கல்லெறிதலில் காயம் ஏற்பட்டு, உதடு கிழிந்து சீழ்; பிடித்து தொடர் சிகிச்சையில் சில நாட்கள் இருந்திருக்கிறார். ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோரிக்கை என்ன
இந்த நிலையில்தான் எடப்பாடி மீது இதில் 302 சட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 302 என்பது கொலை வழக்கு சட்ட பிரிவு ஆகும். இந்த பிரிவின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தெரிந்துதான் எல்லாம் நடந்து இருக்கிறது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேலுமுருகன் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

பதில் என்ன?
இந்த நிலையில்தான் இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி மௌனம் கலைத்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த கனிமொழி.. நீங்கள் கேட்பது நியாயம்தான். அறிக்கை வந்துள்ளது. இந்த அறிக்கை மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் பரிசீலனைகளை முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.

ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின் இதில் இருக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார். சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பார். எடப்பாடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர் அதில் தேவையான நடவடிக்கையை எடுப்பார். மக்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications