Kovilpatti Kadalai Mittai: கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்கிறது! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
தூத்துக்குடி: உலகம் முழுவதும் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் (Kovilpatti Kadaai Mittai) விலை உயர போகிறது. ஒரு கிலோ கடலை மிட்டாய் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த விலை உயர்வு ஏன் என்பதையும் பார்க்கலாம்.
கடலை மிட்டாயை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். எத்தனை பெரிய விருந்து சாப்பிட்டாலும் இந்த கடலை மிட்டாயை சாப்பிட்டாலும் போதும் எளிதில் ஜீரணமாகிவிடும். குழந்தைகள் சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும்.

ஆனால் இந்த கடலை மிட்டாய் குழந்தைகளை எதுவும் செய்வதில்லை. அளவுக்கு மிஞ்சினால், அதிக தித்திப்பு காரணமாக இருமல் ஏற்படும். மற்றபடி அளவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
இந்த கடலை மிட்டாயில் வெல்லம், வேர்க்கடலை, ஏலக்காய்த் தூள் ஆகியவை சேர்க்கப்படுகிறது. தற்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பிறந்தநாளன்று சாக்லேட் கொடுப்பது நிறுத்தப்பட்டு, பலரும் கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை பள்ளிகளில் கொடுத்து வருகிறார்கள். இது நல்ல மாற்றம்.
வீடுகளிலும் மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்தால் கடலை மிட்டாயை அக்கம்பக்கத்தினருக்கு விநியோகம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கடலை மிட்டாய்கள் வீட்டிலேயே செய்யலாம் என்றாலும், இதற்கு பெயர் பெற்றது கோவில்பட்டிதான்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கென தனி மவுசு உண்டு. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் இந்த கடலை மிட்டாய் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கடலை மிட்டாய் தொழிலால் கோவில்பட்டி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கடலை மிட்டாய் செய்ய பொருட்களை கொள்முதல் செய்வது, மிட்டாய் செய்வது, தரத்தை பிரிப்பது, பேக்கிங் செய்வது, டெலிவரி செய்வது என பல்வேறு பிரிவுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடலை மிட்டாயை வேர்க்கடலையில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அண்மைக்காலமாக வேர்க்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை 8000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ரூ 6500 உயர்த்தப்பட்டு, அதே 80 கிலோ மூட்டை 14,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை மிட்டாய் செய்வதற்கான முக்கிய மூலப்பொருள் நிலக்கடலையின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் ஒரு கிலோ கடலை மிட்டாய் மொத்த விலையில் ரூ 140 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வால் இனி ரூ 220 க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ 80 அதிகரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications