Kulasai Dasara: 2ஆம் நாள் கோலாகலம்..விஸ்வகர்மேஸ்வரராக கற்பக விருட்ச வாகனத்தில் அம்பாள்! உருகிய மனம்!
தூத்துக்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் அம்பாள் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலமாக வந்தது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து வெளி மாநிலங்களான மும்பை, வெளி மாவட்டங்களான சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் கடற்கரையில் நீராடி கோவிலில் மாலை அணிவித்து காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
நேற்று தசரா திருவிழாவின் இரண்டாம் நாளை முன்னிட்டு அம்பாளுக்கு கோவில் அபிஷேக மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அபிஷேக மண்டபத்தில் 8 வகையான கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு யாகசாலை ஹோமம் பூஜையுடன் கும்ப கலசங்களில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவரான அபிஷேக மண்டபத்தில் திரளான பக்தர்கள் மத்தியில் முத்தாரம்மனுக்கு பால் மஞ்சள் ,விபூதி , தேன் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிசேகம் செய்யப்பட்டு யாகசாலையில் யாக வேள்வியில் உள்ள புனித கலச நீர் ஊற்றப்பட்டு இரண்டாம் நாள் சிறப்பு அபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்திற்கு பின்பு மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாள் முத்தாரம்மன் அபிஷேக மண்டபத்தில் இருந்து விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் திருவீதி உலா வந்து காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான 12-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் நள்ளிரவு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹாரத்தில் பங்கேற்பார்கள்.













Click it and Unblock the Notifications