திருச்செந்தூர் அருகே 1 கிமீ ரிவர்சில் வந்து பயணிகளை இறக்கிவிட்ட பாலக்காடு எக்ஸ்பிரஸ்! திகைத்த மக்கள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 1.5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று பயணிகளை இறக்கிவிட்டு சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலரும் திகைத்து பார்த்து வருகின்றனர்.
பேருந்துகளில் செல்லும் போது சில நேரங்களில் நாம் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் நிற்காமல் பேருந்து சென்று விடும். அப்போது பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தி இறங்குவார்கள். சில நேரங்களில் மீண்டும் பஸ்டாப்பிற்கு ரிவர்ஸ் வந்து பயணிகளை இறக்கி விடும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதை பார்த்து இருக்கிறோம்.

ஆனால், ரயிலில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்று சொன்னால் ஆச்சர்யமாக தோன்றுகிறதா... ஆனால், உண்மையில் இப்படியான ஒரு சம்பவம் திருச்செந்தூர் அருகே நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு, திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், அம்பதுரை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து, நெல்லை, ஸ்ரீவகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சான்விளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு வந்து சேர்கிறது.
பாலக்காட்டில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்செந்தூருக்கு 2.59 மணிக்கு வந்து சேரும். முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பக்தர்களும் அதிக அளவில் பயணம் செய்வார்கள். அதேபோல திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளும் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் தான், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சான்விளை ரயில் நிலையத்தில் சென்றுள்ளது. அதிவேகத்தில் வந்த ரயில் ஸ்டேஷனில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். இதையடுத்து ஸ்டேஷனில் நிற்காமல் சென்றதை உணர்ந்த ரயிலின் லோகோ பைலட் பின்னோக்கி ரயிலை இயக்கியுள்ளார்.
சுமார் 1.5 கி.மீட்டர் பின்னோக்கி ரிவர்சில் வந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்து பயணிகளை இறக்கி விட்டு சென்றுள்ளது. ரயில் ரிவர்சில் வந்ததை பயணிகள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications