விஜயகாந்தின் தவசி படம்.. சீமான் பேட்டியால் நெட்டிசன்கள் சர்ச்சை.. நாம் தமிழர் கட்சியினர் பதிலடி
தூத்துக்குடி: தவசி படத்துக்கு நான்தான் உரையாடல் எழுதினேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டிக்கு பதிலடியாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..

திரை பிரபலங்கள் பலரும், விஜயகாந்த் உடன் தங்களது நட்பு மற்றும் நினைவலைகள் மற்றும் விஜயகாந்த் செய்த உதவிகள் குறித்து ஊடகங்களில் பேசியும், ட்விட்டரில் பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, விஜயகாந்த் குறித்து பேசினார்.
அப்போது சீமான் கூறுகையில், "விஜயகாந்த் என்றால் அச்சமின்மை, துணிவுதான். எதற்கும் பயப்படமாட்டார். தவசி படத்துக்கு நான்தான் உரையாடல் எழுதினேன். விஜயகாந்துடன் அப்போது மனம் விட்டு பேசுகிற நிறைய வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவரை போல சிறந்த மனிதர் கிடைப்பது அரிது. புகழின் உச்சியில் இருந்த போதும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தார்; விஜயகாந்த் நலமுடன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு அரசியல் போக்கே மாறி இருக்கும்; ஆக. சிறந்த மனிதர்; பண்பாளர்" என்று தெரிவித்தார்.

சீமானின் இந்த பேட்டியில்,தவசி படத்துக்கு தான் தான் உரையாடல் எழுதியதாக கூறியது பொய் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர், வடிவேலு, நிழல்கள் ரவி, சிறீமன்,, வடிவுக்கரசி, இளவரசு, பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த படம் தவசி. இந்த படம் 2001ம் ஆண்டு வெளியானது. உதய சங்கர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் விஜயகாந்திற்கு நன்கு ஓடிய படங்களில் ஒன்று.
தவசி படத்தின் திரைகதை, வசனம் எழுதியவர் அந்த படத்தின் இயக்குனர் உதய் சங்கர் தான் என்றும் சீமான் சொல்வதில் உண்மை இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். திரைப்படங்களில் வசனம் எழுதினால், அவர்கள் பெயர் டைட்டில் கார்டில் போடப்படும். அப்படி சீமான் பெயர் தவசி படத்திற்கு போடப்படவில்லை.. இதனால் தான் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வெளியிட்ட பதிவில், டைட்டில் போடாமல் ஒர்க் பண்ணி இருப்பாங்க.. இதெல்லாம் சினிமவில் பொதுவானதுது. ஏதாவது சந்தேகம் இருப்பின் படத்தில் நடித்த வடிவேலு உள்ளிட்ட நிறைய ஆட்கள் இன்றும் இருக்கிறார்கள் .. கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்... என்று கூறியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications