தாமரை கடலிலும் மலரும்… தமிழிசை ஆவேச பேச்சு
தூத்துக்குடி: அனைத்து இடங்களிலும் தாமரை மலரும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதனையொட்டி, பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அவ்வப்போது தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில், இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

மண்ணின் மகள்
அப்போது, கனிமொழிக்கு தான், தூத்துக்குடி புதிய இடம் என்றும், தாம் இந்த மண்ணின் மகள் என்றும் கூறினார். 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மெட்ரோ, தேஜஸ் ரயில்களை கொண்டு வந்துள்ளோம், காங் - திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் எந்த ரயிலை கொண்டு வந்தனர் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்

தாமரை மலரும்
மேலும், புல்லட் ரயில் முடியாது என்று சொல்கிறார்கள், தொழிற்சாலைகள் முடியாது என்கிறார்கள். இவர்கள் முடியாது என்று சொல்வதை தான் நடத்தி காட்டுவேன். அதேபோல், தாமரை மலராது என்று சொல்கிறார்கள்; மலரும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.

திமுகவுக்கு பயம்
திமுகவுக்கு தமிழிசை பதில் சொல்வதைவிட, இங்குள்ள மக்கள் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இதனால் பயந்து போய் உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை நான் இந்த மண்ணின் மகள். கனிமொழி சொல்வது போல் நான் ஒன்றும் புதிதாக வரவில்லை. குழந்தையிடம் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ளாது.

கனிமொழிக்கு புதிது
தூத்துக்குடிக்கு நிறைய முறை சுற்றுப்பயணம் வந்துள்ளேன். கனிமொழிக்கு வேண்டுமென்றால் தூத்துக்குடி புதிதாக இருக்கலாம். தாமரை ரோட்டில் மலரும், கடலில் மலரும் என்றும் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications