ஆண்டியாய் நின்ற பழனி முருகன்.. திருச்செந்தூர் கடலோரத்தில் அதிசயம்.. கிட்ட நெருங்கினால் சிலிர்ப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அன்றைய காலங்களில் புதைந்துபோன கற்சிலைகள் மேலெழுந்து வருகின்றன.. அந்தவகையில் திருச்செந்தூர் கடலில் பழனி ஆண்டவர் சிலை எழுந்தருளியிருக்கிறதாம்.. என்ன நடந்தது?
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் சமீபகாலமாகவே கடல் அலையின் சீற்றம் காணப்படுகிறது.. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாகவே கடல் சீற்றம் ஏற்பட்டு கடற்கரையில் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடல் அரிப்பு தொடரும் நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஐஐடி நிபுணர்களுடன் ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர்.
பொக்கிஷம்: இதனிடையே, கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், திருச்செந்தூரின் கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. கடந்த மாதம் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகளும், 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டும் தென்பட்டது.
அதேபோல, 10 நாட்களுக்கு முன்பு, 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலையும், கடல மண்ணிலிருந்து வெளியே வந்தது. 2 கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்ட அந்த முனிவரின் சிலைக்கு பக்கத்திலேயே, பெண் உருவம் கொண்ட ஒரு அடி உயரமுள்ள நாகர் சிலையும் கிடைத்தது.
யாளியின் கல்சிலை: கடந்த வாரம், 200 ஆண்டுகள் பழமையான யாளி அதாவது சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய சிலை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது.. ஆனால், அந்த யாளியின் கல்சிலை உடைக்கப்பட்டு, அதன் ஒரு கல் பாதம் மட்டும் கிடைத்துள்ளது.. அது கடலோரத்தில் தற்போது மேலேழுந்து வரும்போது, பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே காட்சி தந்தது, பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
இந்த நிலையில், இன்று திருச்செந்தூர் கடற்கரையில், பழனி ஆண்டவர் சிலையை பார்த்ததுமே, பக்தர்கள் திக்குமுக்காடிப்போய் விட்டார்கள்.. அதாவது, அய்யா கோவில் பின்புறம் கடற்கரை ஓரமாக பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்து, முருகனை தரிசிப்பார்கள்.. அப்படி பாதயாத்திரை வரும்போது, முருகன், பழனி ஆண்டவர், வெண்கல சிலை, மரத்தினால் செய்யப்பட்ட சிலைகளை, மினி ஆட்டோ லோடு ஆட்டோ போன்ற வாகனத்தில் வைத்து பாதயாத்திரையாக வருவது வழக்கமாகும்.
கடற்கரை: இதில், மரங்களால் செய்யப்பட்ட சிலைகளை வாகனத்தில் வைத்து கொண்டுவரும்போது, அவை எதிர்பாராத விதமாக சேதமடைந்து விட்டால், அந்த சிலைகளை கடற்கரையிலேயே விட்டு விட்டு சென்று விடுவார்கள்.. அப்படி விட்டுச்சென்ற, பழனி ஆண்டவர் சிலைதான் இன்று கிடைத்துள்ளது.. மரத்தினால் செய்யப்பட்ட அந்த பழனி ஆண்டவர் சிலையின் கை பகுதி சேதம் அடைந்துள்ளது. ..
கிட்டத்தட்ட ஒரு வாரமாக அந்த சிலையானது அந்த கடல் பகுதியிலேயே இருக்கிறதாம்.. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, பழனி ஆண்டவர் சிலையருகில் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள்... மேலும் பலர் அந்த சிலையின் அருகில் நின்று போட்டோக்களை எடுத்து கொள்கிறார்கள்..
மெய்சிலிர்ப்பு: சமீபகாலமாகவே, திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு சிலைகளையும் பார்க்கும்போதெல்லாம் பக்தர்கள் மெய்சிலிர்த்து பரவசம் அடைகிறார்கள்.. இதுபோன்ற பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications