திருச்செந்தூர் முருகனின் ஆசி.. தூத்துக்குடி வேகமாக வளர்ச்சி அடைகிறது.. பிரதமர் நரேந்திர மோடி!
தூத்துக்குடி: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு ராமரின் மண்ணில் நேரடியாக கால் பதித்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகனின் ஆசியோரு தூத்துக்குடி வளர்ச்சி அடைந்து வருவதாக கூறிய அவர், இந்த புதிய விமான நிலைய முனையம் சுற்றுலா அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். மாலத்தீவில் இருந்து நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது தமிழக அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர் தூத்துக்குடி புதிய விமான நிலைய விரிவாக்க கட்டடத்தை திறந்து வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதன்பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வணக்கம் என்று சொல்லி பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து மோடி பேசுகையில், இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். 4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பின், நேரடியாக ராமரின் புனித மண்ணில் கால் பதிப்பது எனது பாக்கியம். சர்வதேச அளவில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியாவை படைப்போம்.
தமிழ்நாட்டில் சாலைகள், எரிசக்தி மற்றும் விமான நிலையங்கள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பும், எரிசக்தியும் ஒரு மாநிலத்தின் முதுகெலும்பை போன்றது. இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பயணம் 2014ல் தொடங்கியது. திருச்செந்தூர் முருகனின் ஆசியோடு தூத்துக்குடியில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால்விட்டவர் வ.உ.சிதம்பரனார். அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்து கொண்டவர். அவரின் தொலைநோக்கு பார்வை போற்றுதலுக்கு உரியது. சுதந்திர கனவை வீரபாண்டிய கட்டபொம்மன்,, அழகுமுத்துகோன் உருவாக்கினார்கள். பாரதியாரும் இங்கு பிறந்தவர்.
பாரதியாருக்கும் எனது தொகுதியான வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தூத்துக்குடியை போல் காசியையும் நேசித்தவர் பாரதியார். கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸுக்கு பரிசாக அளித்தது என் நினைவில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தூத்துக்குடி முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
பிரிட்டனில் விற்பனையாகும் 99% இந்தியப் பொருட்களின் விலை குறையும். இதனால் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இங்கிலாந்து உடனான ஒப்பந்தம் இந்திய புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும். தீவிரவாதிகளின் கட்டமைப்பை அழித்ததில் மேக் இன் இந்தியா திட்டம் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் பலம் கண்கூடாக தெரிந்தது. அதேபோல் மேம்படுத்தப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மூலமாக 20 லட்சம் பயணிகளை கையாள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் நாட்டின் நகரங்களை எளிதாக இணைக்கும். இதன் மூலமாக சுற்றுலாவும் அதிகரிக்கும். ரூ.2,500 கோடி மதிப்பில் திறக்கட்ட சாலைகள் சென்னையோடு இணைக்கும். இது தமிழக வர்த்தகத்திற்கான புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications