“நாட் அலவுட்”.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 5ம் ஆண்டு! கடற்கரையில் நினைவேந்தலுக்கு போலீஸ் தடை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த முத்துநகர் கடற்கரையில் அனுமதி கிடையாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலையில் இருந்து வெளியேறும் வாயுக்கள் மற்றும் கழிவுகளால் அப்பகுதி மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், அப்பகுதியின் சுற்றுச்சூழலில் கெடுவதாகவும் கூறி அதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வந்தது.

குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெடித்த மக்களின் போராட்டம் 100 நாட்களை கடந்தும் தொடர்ந்தது. இந்த நிலையில் 2018 மே 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 வயது சிறுமி ஸ்னோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தன. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது. இன்று வரை அது திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அதில் போலீசார் மீதும், அப்போதைய அதிமுக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 13 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து இன்று தூத்துக்குடி மக்கள் இன்று 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை கடைபிடிக்கின்றனர். இதனை அடுத்து தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின.
இந்த நிலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்து இருக்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகா் கடற்கரையில் மெழுகுவா்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி வழக்குரைஞா் ஹரிராகவன், மாவட்ட காவல் துறை நிா்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தாா்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் முத்துநகா் கடற்கரையில் மேற்படி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக வதந்தியை பரப்புவோா் மீதும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறி முத்துநகா் கடற்கரையில் அஞ்சலி செலுத்த கூடுவோா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரம் நிா்வாகத்துறை மற்றும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்துகின்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு எந்தத் தடையும் இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கிடையே நேற்று மாலை முத்துநகர் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்றும் அனுமதியின்றி நினைவேந்தல் கூட்டங்கள் நடத்த வாய்ப்புகள் இருப்பதால் போலீசார் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications