படாரென வெடித்துச் சிதறிய பேட்டரி.. பற்றி எரிந்த வங்கி! உடல் கருகி பலியான செயலாளர்! அதென்ன கேன்ல?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் செயலாளர் பலியான நிலையில், அங்கு இருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து பெட்ரோல் கேன், தீப்பெட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதால் இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோவில் தெருவில் தூத்துக்குடி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழப்புதுகுடியைச் சேர்ந்த 52 வயதான பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்.
இந்த வங்கியுடன் இ சேவை மையமும் செயல்பட்டு வருகிறது இந்த இ சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் இ சேவை மையத்தில் உள்ள பெண்ணும் ஸ்ரீதரனின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர்.
பணியில் செயலாளரான ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் அங்கிருந்த பேட்டரி வெடித்துள்ளது. பேட்டரி வெடித்ததில் தீ மளமளவென பரவி வங்கி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. உடனே அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தீ முழுமையாக பரவியுள்ளது. இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது புகைமூட்டமாக இருந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போது புகை மூட்டமாக இருந்துள்ளது. பின்னர் தீக்காயத்துடன் ஸ்ரீதரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் தீ விபத்து காரணமாக வங்கி முழுவதும் தீயில் எரிந்தது. இதில் வங்கியில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட அலுவலர்கள் சேதமடைந்த ஆவணங்கள் தவிர மற்ற ஆவணங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பணியாளர்களிடம் அலுவலர்களும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் வங்கியில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலும், அதன் அருகே தீப்பெட்டியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதனால் அவர் தீ விபத்தில் இறந்தாரா? அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று மதியம் 2 மணிக்கு மேல் வங்கிக்கு அதிகாரிகள் ஆடிட்டிங் செய்ய வருகை தர இருந்தாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி ஊழியில் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென ஸ்ரீதரனின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications