ஹாப்பி பர்த் டே டூ யூ! வாட்ஸப் ஸ்டேட்டஸால் வம்பு! தூத்துக்குடி ரவுடிக்கு கேக் ஊட்டிய எஸ்ஐக்கு ஆப்பு!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கேக் ஊட்டிய போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம்.
இவர் மீது அப்பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பிரபல ரவுடி
இந்த நிலையில் வைகுண்ட பாண்டியன் பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை கொண்டாடிய தினத்தன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட எஸ்பியின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோர் பல்வேறு குற்ற பின்னணி உள்ள வைகுண்ட பாண்டியனின் பிறந்த நாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்றுள்ளனர்.

வாழ்த்து
அப்போது உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோரை வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26.03.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வைத்து ஒருவரை அரிவாள் பிடியால் தாக்கியதாக கூறி ஸ்ரீவைகுண்டம் போலீசார் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டத்தை கைது செய்தனர்.

புகைப்படத்தால் அதிர்ச்சி
இவர் மீது பல்வேறு குற்றங்கள் நிலுவையில் உள்ள காரணத்தினால் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுப்படி இவரை நேற்றைய தினம் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு குற்றப்பின்னணி உடைய பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் காவல்துறை அதிகாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் கலந்து கொண்டது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

எஸ்பி நடவடிக்கை
இந்த நிலையில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications