புகார் அளிக்க வந்த பெண்.. போன் நம்பரை எடுத்து 'டபுள் மீனிங்' ஆபாச பேச்சு.. வரம்பு மீறிய எஸ்.ஐ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுதாகர் என்ற சப் இன்ஸ்பெக்டர், புகார் கொடுக்க வந்த பெண்ணின் செல்போனை எடுத்து அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். போலீசாரும் இந்த புகார்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுப்பதுதான் வழக்கம். இருந்தாலும் ஒரு சில போலீஸ் நடந்து கொள்ளும் விதம் காவல் நிலையத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று யோசிக்க வைக்கும் அளவில் தான் உள்ளது.

தூத்துக்குடியில் இதுபோன்ற ஒரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. உடனடியாக காவல்துறையும் இந்த விவகாரத்தில் உரிய ஆக்ஷனை எடுத்துள்ளது. தூத்துக்குடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவத்தின் விவரத்தை பார்க்கலாம்.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுதாகர்.
இவர் தனது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த திருமணம் ஆன பெண் ஒருவரின் புகார் மனுவில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து இருக்கிறார். பின்னர் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து இரட்டை அர்த்தங்களுடன் ஆபாசமாக பேசி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் மறுத்தாலும் விடாத எஸ்.ஐ தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், எஸ்.ஐ -யை தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் இப்படி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஆனால், தப்பை உணராமல் அந்த எஸ்.ஐயோ உன்னை கைது செய்து உள்ளே தள்ளிவிடுவேன்.. என மிரட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த போன அந்த பெண்ணும் அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்கணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்ட், புகாருக்கு உள்ளான எஸ்.ஐ சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தற்போது, காவல் கண்காணிப்பாளரால் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள சப் இன்ஸ்பெக்டருக்கு சிறப்பாக பணியாற்றியதாக கடந்த 4 தினங்களுக்கு முன்புதான் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார். அதற்குள் புகாருக்குள் சிக்கி ஆயுதப்படைக்கு போலீஸ் எஸ்.ஐ மாற்றப்பட்டு இருப்பது காவல் தூறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications