தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா கைது! தப்பியோட முயன்ற போது எலும்பு முறிவு
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த ஏ+ கேட்டகிரி ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை செம்மஞ்சேரி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால், கை எலும்பு முறிந்துள்ளது.
ரவுடி மகாராஜா, தாசில்தார் செல்லத்தை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் தாசில்தாரின் புகாரின் பேரில் அவரை போலீஸார் தேடி வந்தனர்.

அப்போது சோழிங்கநல்லூர் பகுதியில் வேறு ஒரு நபரிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட போது அவரை செம்மஞ்சேரி போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கால், கை எலும்பு முறிந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே மகாராஜாவை, காவல் உதவி ஆய்வாளர் காலில் சுட்டு பிடித்து கைது செய்திருந்தார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய போது போலீசில் 5 பேர் சிக்கிக் கொண்டனர்.
நகைக் கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு வேறு ஒருவரின் தூண்டுதலின் பேரில் இவர்கள் 5 பேரும் கூலிப் படையினராக செயல்பட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து திருநெல்வேலி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிண்டி தனிப்படை போலீஸார், திருநெல்வேலி மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி மகாராஜாவை கிண்டி தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து வாகனத்தை எடுக்கச் சென்றபோது மறைத்து வைததிருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயற்சித்தாராம்.
இந்நிலையில், காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி மகாராஜாவை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வலது காலில் சுட்டு பிடித்து கைது செய்தார். காலில் காயம் ஏற்பட்டுள்ள ரவுடி மகாராஜா சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications