எரும மாடுகளா! ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா! கோவில்பட்டியில் பெண்களை திட்டிய ஊழியர் -ஷாக்
தூத்துக்குடி: ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிவதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களை ‛எருமை மாடுகளா.. அறிவு இல்லை.. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா.. உங்களுக்கு உட்கார சேர் கேக்குதா?' என ஊழியர் வசைப்பாடிய சம்பவத்தால் பெண்கள் மனம் நொந்து போயினர்.
முதல்வர் ஸ்டாலின் கனவு திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதியில் அண்ணா பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தில் தற்போது 1.06 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இனி அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் செய்தோரில் பல லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெற அரசு நிர்ணயம் செய்த தகுதிகள் இல்லாததால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நிராகரிக்கப்பட்டோரின் செல்போன்களுக்கு மெசேஜ் மூலம் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்கான முகாம் நடந்தது. இந்த முகாமில் மேல்முறையீடு செய்யவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெண்கள் குவிந்தனர்.
அதற்கு ஏற்ப அங்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு இருக்கைகளில் அமர சென்றனர். அதோடு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் அங்கு பணியாற்றிய ஊழியர் பெண்களை வசைபாட தொடங்கினர்.
அப்போது, ‛‛எருமை மாடுகளா... அறிவு இல்லையா... சோத்தை தானே திங்குறீங்க.. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா.. உக்கார சேர் கேக்குதா?'' என கடும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். இதனை சில பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்ட நிலையில் சிலர் கண்கலங்கினர். இதற்கிடையே அங்கிருந்த சில அந்த ஊழியரை கண்டித்து அவரது பெயர் விபரங்களை கேட்டனர். ஆனால் அவர் எதையும் சொல்லாமல் நழுவினர்.
இதற்கிடையே கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்களை வாய்க்கு வந்த வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடிய ஊழியர் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications