சாத்தான்குளத்தில் காவலரின் தாய் வெட்டிக் கொலை! கொள்ளை முயற்சியில் கொடூரம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வீட்டில் தனியே இருந்த காவலரின் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலரின் தாய் அணிந்த நகைகள் திருடப்பட்டிருக்கின்றன. எனவே கொள்ளை முயற்சியில் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக விக்ராந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்றும் வழக்கம்போல அவர் பணிக்கு சென்றிருந்த நிலையில், அவரது தாய் 65 வயது மூதாட்டி வசந்தா மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த விக்ராந்த் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். வீ்ட்டில் தனியாக இருந்த தாய் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
புகாரையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், தாய் வசந்தா அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கொள்ளை முயற்சியின் போது, வசந்தா அதற்கு ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம் என்றும், எனவே கொள்ளையன் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் யூகித்துள்ளனர். இருப்பினும் விசாரணை முடிந்த பின்னர்தான் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த போலீசாரின் தாய் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் சாத்தான்குளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன. சமீப காலமாக தென் மாவட்டங்களில் குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதிய ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், இந்த சாதிய மோதல்கள் பள்ளி மாணவர்களிடையே நடைபெறுவது கொடூரத்தின் உச்சமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்திருக்கின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறை என்கவுண்ட்டர் எனும் பாணியை கையில் எடுத்துள்ளனர். ஆனால், இது குற்றங்களை குறைக்க உதாவது என்றும், ஆயுத மோதல்களைதான் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications