திருச்செந்தூரில் கோயிலில் குழந்தையை தூக்கிய பெண்.. தேனி விரையும் தனிப்படை.. நெருங்கும் போலீஸ்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் பக்கத்து வீட்டு பெண் போல நைசாக பேசி, ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக குழந்தையை கடத்திச் சென்ற பெண் தேனிக்கு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதையடுத்து தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ். கொத்தனார் ஆவார்.இவரின் மனைவி ரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜின் மனைவி ரதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை போடுவதாக வேண்டி உள்ளார்.

இதன்படியே தசரா திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கணவன்-மனைவி இருவரும் குழந்தை ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவர்களுடன் நன்றாக பேசி பழகி உள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குழந்தை ஸ்ரீஹரிஸ் உடன் முத்துராஜ் ரதி தம்பதி கடந்த வியாழக்கிழமை வந்துள்ளனர். அப்போது இருவரும் சுவாமி தரிசனம் செய்துவிடடு, குழந்தையுடன் துணி துவைப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு வந்திருக்கிறார்கள்.
அப்போது ரதியை பார்த்த அந்த பெண், நைசாக பேசி உள்ளார். அப்போது முத்துராஜ் சோப்பு வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றுவிட்டார். அதே நேரத்தில் ரதியுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்த பெண், திடீரென குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு வருவதாக அந்த பெண் தூக்கி சென்றார். பின்னர் குழந்தையுடன் அந்த பெண் மாயமாகிவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜூம், அவரது மனைவி ரதியும் தங்களது குழந்தையை தீவிரமாக தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது தான் அவர்களுக்கு அந்த பெண் தங்களுடன் நன்றாக பழகி நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை அந்த பெண் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் குழந்தையை கண்டுபிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையை கடத்திய பெண்,தேனிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.இதையடுத்து தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்துள்ளனர். விரைவில்அந்த பெண்ணை பிடித்துகுழந்தையை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications