வெள்ளத்தால் ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு: ஆலை முறையீட்டை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
வேதாந்தா நிறுவனத்தின் முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கை விரைவில் பட்டியலிடுவதாக தெரிவித்துள்ளது .
தூத்துக்குடியில் கடும் மழை காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை வெள்ளம் சூழ்ந்து ஆலையின் இயந்திரங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய ஆலையின் வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது, கடந்த 25ம் தேதி ஒரே நாளில் 306 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியது. இந்த கன மழையின் காரணமாக அதிகமான மழை வெள்ள நீர் ஆலையை சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ஆலையில் இயந்திரங்கள் அமைந்துள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் தேங்கி உள்ளது எனவும் இதனால் உயர்ரக இயந்திர உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என புதிய மனுவில் வேதாந்தா நிறுவனம் கோரியிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள இயந்திரங்களில் இருந்து ஆசிட் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், அவ்வாறு நிகழ்வது பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் நிலுவையில் உள்ள ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீடு மனு மற்றும் ஆலை பாராமரிப்பு மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் முறையிடப்பட்டது, இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சந்திரசூட், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications