தகைசால் விருது தந்த ஸ்டாலின்.. நேராக முதல்வர் வீட்டுக்கு போன நல்லக்கண்ணு! கையைப் பிடித்து நெகிழ்ச்சி
திருவைக்குண்டம்: சமீபத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலை போராட்ட வீரர்களில் முக்கியமானவருமான நல்லக்கண்ணுவுக்கு தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருதை அறிவித்தது.
இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக இந்த விருது நல்லக்கண்ணுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இந்த விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலை போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிலைமை
இந்தியாவின் அரசியல் சூழல் என்பது இதர நாடுகளின் அரசியலை போன்றதல்ல என அரசியல் கூர்நோக்காளர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. பல்வேறு நாடுகளில் நிற வேற்றுமை இருக்கும். சில நாடுகளில் இன வேற்றுமை இருக்கும். ஆனால் இந்தியாவில் சாதி, இனம், மொழி, அத்துடன் மதம் போன்றவை பின்னி பிணைந்துள்ளன. ஆக இதிலிருந்து மக்களின் கவனத்தை நாட்டு விடுதலையின் பக்கம் எப்படி திருப்புவது என பல அரசியல் கட்சிகள் விழி பிதுங்கி நின்றன. இதன் காரணமாக ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை மேலும் நீட்டித்து சென்றனர்.

பூரண விடுதலை
இதை நாம் எப்படி புரிந்துக்கொள்வதெனில், நாட்டின் விடுதலைக்காக போராடிய கட்சி எது என கேட்டால் உடனே நமது நினைவுக்கு வருவது, காங்கிரஸ்தான். ஆனால் இப்பேர்ப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குக்கூட சுதந்திரம் குறித்த புரிதல் வேறுமாதிரியாக இருந்தது. அதாவது, நாடு 'பூரண சுதந்திரம்' அடைய வேண்டும் என்று முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் கோரிக்கையை வைத்தனர். இதனையடுத்துதான் காந்தி உட்பட அனைவரும் இந்த கோரிக்கையை ஏற்று அதையே எதிரொலித்தனர்.

காங்கிரஸ் நிலைபாடு
இந்தியாவில் 1885ல் காங்கிரஸ் கட்சி உருவானது. ஆனால் அதன் பின்னர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. ஆனால் 'கம்யூனிசம்' என்பது அடக்கு முறைக்கு எதிரான பெரும் பூதம். அந்த பூதம் ஏற்கெனவே ஐரோப்பாவை ஆட்டி படைத்துவிட்டது. 1925 காலகட்டத்தில் சோவியத் யூனியனையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. இதைக் கண்டு ஆதிக்க போதையில் மயங்கி இருந்த ஆங்கிலேயர்களுக்கு சடாரென விழிப்பு வந்தது. இந்தியாவில் இந்தக்கட்சி தொடங்கிய உடனேயே தடை செய்தனர்.

நீதிக்கட்சி
தமிழ்நாட்டில் அப்போதுதான் நீதிக்கட்சி துவக்கப்பட்டிருந்த காலம். நீதிக்கட்சி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலுவாக முன்னிறுத்தி மக்களை அரசியல்படுத்திக்கொண்டிருந்த காலம். ஆனால் இக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பணக்காரர்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படியானது அல்ல. அது நாடு முழுவதும் மேலே குறிப்பிட்டதைப்போல பூரண சுதந்திரம் கோரி மக்களை எழுப்பிக்கொண்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டிலும் கட்சி வேகமாக பரவியது.

தமிழ்நாட்டின் நிலைமை
அன்றைய தமிழ்நாட்டின் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக தஞ்சாவூரின் நிலையை குறிப்பிடலாம். தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 லட்சம் ஏக்கர் மேல் உள்ள நஞ்சை நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரும் நிலப்பிரப்புகள், ஆதினங்கள் கையில் இருந்தன. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 6,600 ஏக்கர் நிலம் இருந்தது. இவையல்லாமல் தஞ்சை, திருப்பனந்தாள், உத்திரபதி, மன்னார்குடியில் என சுற்றுவட்டாரங்களில் பல்லாயிர ஏக்கர் நிலங்கள் மடங்களுக்கு சொந்தமாக இருந்தன. இங்கு லட்சக்கணக்கான விவசாயிகளை பண்ணையடிமைகளாக வைத்து, கொழுத்தனர் பண்ணை நிலப்பிரப்புக்கள். அதிகாலை 3 மணிக்கு கொம்பு ஊதப்படும்.

சாதிய அடிமை
பண்ணையடிமைகள் விழித்துக்கொண்டு நாலரை மணிக்கு ஏற்கட்டை அவிழ்க்க வேண்டும். அதன்பிறகு வயலில் இறங்குபவர்கள் 11 மணிக்கு மேட்டுக்கு(கரை) வர வேண்டும். அங்கு வைத்திருக்கும் கஞ்சியை குடித்துவிட்டு, மாட்டுக்கு தண்ணி காட்டிவிட்டு, மீண்டும் வயலுக்குள் இறங்கி இரவு எட்டு, ஒன்பது மணி வரை உழைக்க வேண்டும். இதில் உடனிலை சரியில்லை என்றோ அல்லது வேறு காரணங்களுக்காக பண்ணையடிமைகள் வேலைக்கு வராமல் போனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் ஈரக்குலையை நடுங்கச் செய்யும்.

தண்டனை
ஐந்து பிரி கொண்ட சாட்டையில், பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லை சொருகி அடிப்பார்கள். சதைகள் பிய்த்துக்கொண்டு போகும். ரத்தம் பீறிடும். துடித்து அழுதால் அடி அதிகமாகும். இவ்வளவு அடிபட்டவர்களுக்கு எந்த வைத்தியமுமில்லை. வைக்கோலை கொளுத்தி சாணி உருண்டையைச் சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பது மட்டுமே வைத்தியம். பெண்களும் இதிலிருந்து தப்ப இயலாது. இந்த கொடூரத்தின் உச்சமே 'சாட்டையடி சாணிப்பால்'. மாட்டு சாணத்தை கரைத்து மாட்டுக்கு மருந்து கொடுக்கும் மூங்கில் குழாயில் நிரப்பி அந்த சாணிப்பாலை பருக செய்வார்கள்.

வெற்றிக்கண்ட போராட்டம்
இந்த கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் வீர தீரமாக போராடினார்கள். வெற்றியும் பெற்றார்கள். இவையெல்லாம் நடந்தது 1940 காலகட்டங்களில் நடந்தவை. இதுபோல தமிழ்நாடு முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் தீரமாக இறங்கி பணியாற்றினார்கள். இதன் தாக்கம் நலக்கண்ணுவையும் பாதித்தது. 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஆர்.நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணுவாக மாறினார்.

தோழர் நல்லக்கண்ணு
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு,பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நல்லக்கண்ணு ஒரு போராளியாக வெளியே வந்தார். இதன் தொடர்ச்சியாக நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் கம்யூனிஸ பூதம் விடுதலைக்கான அர்த்தத்தை இவ்வாறு வரையறுத்திருந்தது. விடுதலை என்பது, சாதியிலிருந்து, மத்திலிருந்து, பாலினத்திலிருந்து, ஆணாதிக்கத்திலிருந்து, பொருளாதார சுரண்டலிலிருந்து, வர்க்க ஏற்றத் தாழ்விலிருந்து முற்றிலும் அனைவரும் விடுவிக்கப்படுவதே பூரண விடுதலை என எண்ணி அதற்காக மீண்டும் வீரியமாக செயல்பட்டது.

புரட்சிக்கு பயந்து தடை
விளைவு சோவியத் யூனியனை போல இந்தியாவிலும் எங்கு புரட்சி வந்து மேலே குறிப்பிட்ட எல்லா தடைகளும் உடைந்து விடுமோ என என்னி நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே 1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. நாடு முழுவதும் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது தோழர்களும் சுற்றி சுற்றி வேட்டையாடப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நல்லக்கண்ணுவும் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீண்ட மீசை இருந்தது. இதை காண பொறுக்காத காவல்துறையினர் அதை வெறும் கைகளில் பிடுங்கி எடுத்தனர். பின்னர் தீயிட்டு பொசுக்கி எரித்தனர். இதனால் தற்போது வரை அவருக்கு மீசை இல்லை.

எதிர்கொண்ட சித்ரவதை
புரட்சிகர சிந்தனைகளுக்காக சுமார் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றார். வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர்.நாங்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் இவர் தலைமையிலான போராட்டங்கள் கணக்கில் இல்லாதவை.

நன்கொடை
தென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்த பொழுது, நல்லகண்ணுவின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது. தனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார். இப்பேர்ப்பட்ட ஒரு வீரனின் 80வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக ஒரு கோடி ரூபாயை கட்சி அவருக்கு நன்கொடையாக வசூலித்து கொடுத்தது. ஆனால் அதை அவர் மீண்டும் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.

போராட்டங்கள்
தமிழக அரசு 'அம்பேத்கர் விருது' வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்து விட்டார். தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர். தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர்.அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.
Recommended Video

ஹீரோ
சினிமாக்களில் ஹீரோக்களை தேடும் இளைஞர்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோவாக வலம் வந்தவர். இவருக்கு 2022ம் ஆண்டு தகைசால் விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து முதலமைச்சரை நேரில் சந்தித்த நல்லக்கண்ணு அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications