கோயிலுக்கு அருகே தேவாலயம்.. மனுதாரருக்கு என்ன பிரச்சனை? உயர்நீதிமன்ற மதுரை கிளை நறுக் கேள்வி
தூத்துக்குடி: கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மத நல்லிணக்கம்தான் ஏற்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி காயாமொழி கிராமத்தில் ஊர்காத்த சாமி கோயில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு எதிராக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து கோயில் அருகே தேவாலயம் கட்டும் நடவடிக்கைகள் நடந்த வருகின்றன. இது முற்றிலும் பொருத்தமற்றது. இப்படி கட்டுவதால் சர்ச்சைகள்தான் உருவாகும். எனவே கோயில் அருகே தேவாலயம் கட்ட அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும். தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை? அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு; எனவே கோயில் அருகே தேவாலயம் கட்டலாம்" என்று கூறி பாஸ்கர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே தென் மாவட்டங்களில் கோயில்களுக்கு அருகில் தேவாலயம் உள்ளிட்ட பிற மத வழிப்பாட்டு தலங்களை கட்ட கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னிறுத்தி போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்குறிப்பிட்ட உத்தரவை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications