ஊராய்யா இது.. அப்பப்பா என்னா வெயிலு... திருட வந்த வீட்டில் குளிச்சிட்டு ஓய்வெடுத்த ரியல் கீரிப்பிள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் களைப்படைந்த திருடன், திருடச்சென்ற வீட்டிலேயே குளித்துவிட்டு ஓய்வெடுத்தார்.. பின்னர் சாவகாசமாக கொள்ளையடித்து சென்றுள்ளார். இதையடுத்து கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடிவேலு படத்தின் காமெடிகளில் உள்ள காட்சிகளையும் விட உச்சபட்சமாக ரியலில் நடக்கிறது. திருட வந்த வீட்டில் சாப்பிட்டு உறங்குவது, திருட வந்த வீட்டியே ஓய்வெடுப்பது, திருடிய வீட்டிற்கு திரும்ப வந்த மன்னிப்பு கடிதத்துடன் பொருட்களை வைத்து செல்வது என பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் களைப்படைந்த திருடன், திருடச்சென்ற வீட்டிலேயே குளித்துவிட்டு ஓய்வெடுத்துள்ளார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் நீலாபுஷ்பா. இவருக்கு 60 வயது ஆகிறது. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்துவிட்டனர். மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மகள் வேறு ஊரில் வசித்து வருகிறார். இதனால் நீலாபுஷ்பா மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
நீலாபுஷ்பா பனங்கிழங்கு வியாபாரம் வியாபாரம் செய்து வருகிறார்.. நாகர்கோவில் வடசேரி, திங்கள் சந்தைக்கு சென்று பனங்கிழங்கு வியாபாரம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி நீலாபுஷ்பா கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவிலுக்கு வியாபாரத்துக்கு சென்றிருக்கிறார்..
நவியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் அவர் தனது ஊருக்கு திரும்பி இருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 3¼ பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நீலாபுஷ்பா தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, நீலாபுஷ்பா வீட்டில் பனங்கிழங்கு விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்த பண்டாரபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (46) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.. கடந்த 23-ந் தேதி நீலாபுஷ்பா வீட்டிற்கு பனங்கிழங்கு வாங்குவதற்காக ஜெயக்குமார் வந்திருக்கிறார். பின்னர் அவர் பனங்கிழங்கை வாங்கிவிட்டு புறப்பட்டார். சிறிது நேரத்தில் வியாபாரத்திற்காக நீலாபுஷ்பா வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஜெயக்குமார் மீண்டும் நீலாபுஷ்பா வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடியிருக்கிறார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், திருட வந்த வீட்டில் ஒரு வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்துவிட்டு ஜெயக்குமார் ஓய்வெடுத்துள்ளார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், 3¼ பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.
விசாரணையில் தகவல்கள் தெரியவந்த காரணத்தால், தனிப்படை போலீசார் இட்டமொழி பகுதியில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. தொடர்ந்து ஜெயக்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்கள். வெயில் தாக்கத்தால் திருட வந்த வீட்டில் குளித்து கொள்ளையன் ஓய்வெடுத்த செய்தி தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications