தூத்துக்குடி மாணவி கொலையில் கைதான கொடூரன் மீது மூதாட்டி கொலை வழக்கு! யார் இந்த தர்ம முனீஸ்வரன்?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் பகுதியில் மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் (30) என்பவர் மீது 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என தெரியவந்தது.
குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு, தேர்வுக்காக நீண்ட படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.

வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனராம்.
இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர். அப்போது ஒரு முட்புதரில் மாணவியின் சடலம் கிடைத்தது.
அவரது ஆடைகள் களையப்பட்டிருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் 9 நாட்களாகியும் இதுவரை கொலையாளியை கண்டுபிடிக்காததால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். அது போல் 5 பேரின் டிஎன்ஏக்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் அந்த காட்டு பகுதியில் ஒரு காற்றாலை இருக்கிறது. அங்கு ஒரு சிசிடிவி இருந்ததை கண்ட போலீஸார் அதை ஆய்வு செய்தனர்.
அப்போது யாரோ ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பிடிக்க முயன்ற போது அது திருட்டு வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளில் வெளியான நபரின் புகைப்படத்தை வைத்து தேடி வந்தனர்.
அப்போதுதான் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர்தான் அந்த பைக்கில் வந்து சென்றவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
அவரை கைது செய்த போலீஸார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் எதற்காக மாணவியை கொலை செய்தார், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருக்கு விளாத்திக்குளத்தில் என்ன வேலை என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த சில பொருட்களின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்து போனதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் 2019ஆம் ஆண்டு அவர் மீது 3 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அது போல் 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. மேலும் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த போது வேடநத்தத்தில் மாணவியை கொலை செய்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications