குலசை தசரா திருவிழா கோலாகல கொடியேற்றம்.. இந்த வேடம் கண்டிப்பாக போடக்கூடாது.. எஸ்.பி உத்தரவு
தூத்துக்குடி: குலசை தசரா திருவிழாவில் போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோயிலில் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒருசேர வீற்றிருப்பர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக 14ம்தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதியுலா நடைபெற்றது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. கொடியேற்றம் தொடங்கியது முதல் 9ம் நாள் திருவிழா வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
10ம்நாளான 24ஆம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளலும், தொடர்ந்து மகிஷாசூர சம்ஹாரமும் நடைபெறுகிறது. 11ஆம் நாளான 25ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளலும், அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளலும் சாந்தாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கிறது.
அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளும் அம்மன் பவனியாக நிலையம் வந்தடைந்ததும் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை எழுந்தருளல் மற்றும் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
12ம் நாளான 26ம் தேதி காலை 6, 8, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இதையடுத்து சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி நிறைய பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை பெற்று வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் மாதக்கணக்கில் கூட விரதம் இருப்பார்கள். காளி வேடம் தொடங்கி பலவிதமான வேடங்களை அணிந்து வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இதற்காக தென் மாவட்டங்களில் தசரா குழுக்கள் உள்ளன.
இந்நிலையில் குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications