வீடு தேடி ஆடி வரும் தெய்வங்கள்.. பக்தர்களின் நேர்த்தி கடனால் தென்மாவட்டங்களில் களைகட்டிய குலசை தசரா
தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் தெய்வங்கள் போல் வேடமணிந்து ஆடி, பாடி வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தசரா விழா களைகட்டியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரில் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது.

அதற்கு அடுத்தப்படியாக புகழ்பெற்ற தசரா விழா என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்படின்த்தில் உள்ள முத்தாராம்மன் கோவிலில் நடப்பது தான்.
இந்த கோவிலில் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா என்பது நடக்கும். இந்த விழாவையொட்டி தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சாதி பாகுபாடுகளை மறந்து விரதமிருந்து முத்தாரம்மனை வழிபடுவார்கள். பல ஆயிரம் பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து தெய்வங்களை போல் வேடமணிந்து காணிக்கை பெற்று கோவிலில் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு குலசை தசரா விழா கடந்த அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றத்துடன் தசரா விழா தொடங்கும். அதன்படி கடந்த 3ம் தேதி தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் முத்தராம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இன்று 9 வது நாள். அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி அம்மன் வீதி உலா கோவிலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு 10 வது நாளான நாளை மகிஷாசுரனை, முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விழாவின் சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் முறை தான். அதாவது ஒவ்வொரு பக்தர்களும் இந்து தெய்வங்களின் வேடமணிந்து காணிக்கை பெற்று கோவிலில் செலுத்துவதாக நேர்ந்து இருப்பார்கள். அதன்பிறகு விரத காலத்தில் பக்தர்கள் தாங்கர் நேர்ந்து கொண்ட தெய்வங்களை போல் வேடமணிந்து வீதிகளில் மேள தாளங்கள் முழங்க வந்து மக்களிடம் காணிக்கை பெறுவார்கள்.
தற்போது தசரா விழா இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் வீடு வீடாக தெய்வங்களை போல் வேடமணிந்த பக்தர்கள் வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தசரா பக்தர்கள் சாலைகளில் வலம் வருகின்றனர். காளி, முருகன், விநாயகர், ராமன் உள்பட பல்வேறு வேடங்களில் பக்தர்கள் காணிக்கை பெற்று வருகின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா விழா களை கட்டி உள்ளது.
அதோடு பக்தர்கள் வேடம் அணிந்து காணிக்கை பெறுவதன் பின்னணியில் ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது இதற்கு முன்பு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பின்பற்றும் நோக்கத்தில் பக்தர்கள் வேடமணிந்து வருவதாக கூறுவது உண்டு.
அதுமட்டுமின்றி வேடமணிந்து காணிக்கை பெற்று கோவிலில் செலுத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள், நீண்ட நாட்களாக இருக்கும் குறைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால் தான் குலசை விழாவில் பக்தர்கள் வேடம் அணிந்து ஒவ்வொரு ஆண்டும் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்கள் தசரா விழாவின் கடைசி நாளில் கோவிலில் காணிக்கையை செலுத்தி விரதத்தை முடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications