சாத்தான்குளம் அருகே விசிக கொடி கம்பத்திற்கு எதிர்ப்பு! டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம்! தள்ளுமுள்ளு
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே விடுதலைச் சிறுத்தை கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த டிஎஸ்பிக்கு எதிராக திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சடையன் கிணறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் அனுமதி இன்றி நடப்படுவதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு கடந்த ஜனவரி மாதம் தகவல் வந்தது.

அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் அப்போதிலிருந்தே விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. கட்சி கொடி கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாரை கண்டித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்திருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகில் உள்ள வெளிச்சநத்தம் கொடி மரம் நடப்பட்டு அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய்த் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 6 ஆம் தேதி இரவு வருவாய்த் துறையினர், விசிகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
விசிகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பின் வருவாய்த் துறையினர் , காவல் துறையினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 45 அடி கொடி மரத்தில் விசிக கட்சிக் கொடி ஏற்ற வருவாய்த் துறையினர் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார். வருவாய்த் துறையினர் தாக்கியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications