திருச்செந்தூர் கந்தனின் விஸ்வரூபம்.. சூரனை வதம் செய்த சிங்காரவேலன்.. விண்ணதிர வெற்றிவேல் - வீரவேல்
தூத்துக்குடி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இந்த சூரசம்கார நிகழ்வானது, கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் அமோகமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2ம் தேதி கந்த சஷ்டி கவச விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் தீவிரமான விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்..
சிறப்பு பூஜைகள்: முக்கிய நிகழ்வான சிகர நிகழ்ச்சி எனப்படும் சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கவிருந்ததால், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடந்தது.

இன்று மதியத்திலிருந்தே முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்க துவங்கிவிட்டார்கள்.. முருகப்பெருமானை கண்டதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று வெற்றி முழக்கத்துடன் வரவேற்றனர்.. அரோகரா முழக்கம் கடல் அலையைத் தாண்டியும் எதிரொலித்தது.

சிங்க முகம்: பின்னர், மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடந்தது. முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். இறுதியில், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.. 4500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருக்கல்யாண வைபவம்: நாளை இரவு 11 மணிக்குமேல் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேல கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது... இதேபோல் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications