3 நாட்கள்.. திருச்செந்தூர் செல்ல சரக்கு வாகனங்களுக்கு தடை.. காவல்துறை கொடுத்த அறிவுறுத்தல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் யாகசாலை பூஜை ஜூலை 1ஆம் தேதி மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால், குடமுழுக்கிற்கான பணிகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகளவிலான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனரக வாகனங்களுக்கு தடை
இதனால் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான ஜூலை 5 (இன்று), ஜூலை 6 மற்றும் ஜூலை 7 ஆகிய மூன்று நாட்களும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அறிவிப்பு
இதனால் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தல்
அதேபோல் கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்ல காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications