குதூகலத்தில் குலசை.. சீறிப்பாயப்போகும் ரோகிணி ராக்கெட்! மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலர்ட்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று காலை ரோகிணி ராக்கெட் ஏவப்பட இருப்பதால், அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைந்து உள்ளது. இங்கிருந்து ரோகிணி ராக்கெட் இன்று காலை ரோகிணி ஏவுகணை ஏவப்பட உள்ளது. இதன் காரணமாக மணப்பாடு முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதிக்கு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவா் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, புதன் கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணிக்குள் ஆா்.ஹெச் 200 - ரோகிணி ஏவுகணை ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட நேரத்தில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரிய தாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையில் இருந்து 10 கடல் மைல் (18 கி மீ) வரை உள்ள கடல் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. எனவே புதன் கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மீனவா்கள் மற்றும் பொது மக்கள் சிறிய கப்பல்கள், மீன் பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் மூலம் இந்த கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இன்று தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடி, குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பிரதமர் வருகை, ரோகிணி ராக்கெட் ஏவும் நிகழ்வால் தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications