தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கொந்தளித்த கடல்.. 60 அடி தூரம் பாய்ந்து வந்த கடல் நீர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 60 அடி தூரத்துக்கு கடல்நீர் வெளியேறி ஊருக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் கடல் சீற்றம் மற்றும் கடல் உள்வாங்குதல் சம்பவம் அடிக்கடி நடைபெறும் சம்பவம் என்றாலும், கடல்சீற்றம் அதிகமாக இருந்தாலும், படகுகள் அந்த நேரத்தில் அருகில் இல்லாததால் சேதம் ஏற்படவில்லை.
முத்து நகரம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட கடற்கரை உள்ளது. மாவட்டம் தொடங்கி முடியும் வரை பல கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. தூத்துக்குடியில் உள்ள துறைமுகம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

வழக்கமாக தூத்துக்குடி பகுதியில் மாதத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நாட்களக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருக்கும். குறிப்பாக பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் நீர்மட்டம் உயரும். ஆனால் சில நேரங்களில் வழக்கத்தை விடவும் அதிக அளவில் தண்ணீர் கரையை தாண்டி செல்லும். அப்படித்தான் நேற்று தூத்துக்குடி பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதி, ராஜபாளையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு கடல் நீர், கரையை தாண்டி சுமார் 60 அடி தூரம் ஊரை நோக்கி வந்து சாலையை தொட்டு தேங்கி நின்றது இதனால் கடற்கரையில் உள்ள மீன் ஏலக்கூடம், ஆலயம் உள்ளிட்டவற்றை கடல்நீர் சூழ்ந்தது. அதே போன்று கடல் அலையின் வேகமும் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் சுமார் 60 அடி தூரம் கடல்நீர் கரையை தாண்டி வெளியில் வந்திருக்கிறது. ஊருக்குள் செல்லும் சாலை வரை கடல் நீர் தேங்கி காணப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும்.
ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக சீற்றத்துடன் கடல் காணப்படுகிறது. பகல் நேரத்தில் கடல் நீர் கரையை கடந்து வந்து இருப்பதால் பெரும் சேதம் ஏற்படவில்லை. ஏனென்றால் படகுகள் அனைத்தும் மீன்பிடித்தலுக்காக கடலுக்கு சென்று விட்டன. கரையில் நிறுத்தப்பட்டு இருந்தால் கடல் சீற்றதால் படகுகளில் பலத்த சேதமாகி இருக்கும் என்றனர்.












Click it and Unblock the Notifications