தங்கையின் காதல் கணவருக்கு ஸ்க்ரூடிரைவரால் குத்து.. தடுக்க பாய்ந்த எஸ்ஐ.. போலீஸ் ஸ்டேசனில் பயங்கரம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ஸ்க்ரூ டிரைவரால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணின் கணவரை, பெண்ணின் அண்ணன் ஸ்க்ரூ டிரைவரால் குத்த முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீஸ் எஸ்ஐ தடுக்க முயன்று படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோகுல் சத்தியசேகர் (வயது 23). மார்த்தாண்டத்தில் ஒரு கருப்புக்கட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் பவானி.இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து முடித்திருக்கிறார். இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணம்
இந்தநிலையில் காதல் ஜோடி கோகுல் சத்தியசேகர் -பவானி ஆகியோர் கடந்த 4-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் காதலர்கள் நாகர்கோவில் அருகே மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர். இதற்கிடையே பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் புகார் அளித்தனர்.
விசாரணைக்காக காதல் தம்பதி கோகுல் சத்தியசேகர் -பவானி ஆகியோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார்கள். அப்போது இரு குடும்பத்தினரும் அங்கு இருந்துள்ளனர்.

போலீஸ் ஸ்டேசன்
தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்து பெரும் ஆக்ரோசத்துடன் காணப்பட்ட பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி மற்றும் குடும்பத்தினரிடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தியிருக்கிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே கோகுல் சந்திரசேகருக்கும் பவானியின் அண்ணன் முத்துப்பாண்டிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்குரூடிரைவர்
அப்போது, முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூடிரைவரால் கோகுல் சந்திரசேகரின் கழுத்தில் குத்த முயன்றுள்ளார். இதை கவனித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடனடியாக தடுக்க முயன்றார். இதில், அவரின் வலது கையில் குத்து விழுந்தது. மேலும், கோகுல் சந்திரசேகருக்கு கழுத்தில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் ஸ்டேசனில் பதற்றம் ஏற்பட்டது. மற்ற போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் முத்துப்பாண்டியை மடக்கி பிடித்து ஸ்குரு டிரைவரை பிடுங்கியதாக கூறப்படுகிறது.

பாய்ந்த வழக்கு
இதற்கிடையே படுகாயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார், பவானியின் காதல் கணவர் கோகுல் சத்தியசேகர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து முத்துப்பாண்டி மீது கொலை முயற்சி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி இன்று திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications