அஜிதாவுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமனம்
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுக, அதிமுகவை போல தவெகவிலும் கோஷ்டி அரசியல் முற்றி கொண்டிருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா தனக்கு பதவி வழங்காத அதிருப்தியில் விஜய் காரை மறித்து, பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல், சாமுவேல் ராஜ் என்பவரை தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக விஜய் நியமித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தல் என்றாலே உள்கட்சி பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும்.

திமுக மற்றும் அதிமுக மாதிரியான ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடங்கி தவெக வரை விதிவிலக்கில்லை. சென்னை பனையூரில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா அக்னஸ் என்ற தவெக பெண் நிர்வாகி பதவி கிடைக்காத அதிருப்தியில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சென்ற காரை இன்று மதியம் மறித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அவருக்கு இறங்கி பதில் சொல்லாமல் சென்றார். தவெக நிர்வாகிகள், பாதுகாவலர்கள் அஜிதா மற்றும் அவரின் ஆதரவாளர்களை விலக்கி வைத்தனர். இதுதொடர்பாக தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாங்கள் திமுகவை விட பெரிய கட்சி. திமுகவை விட அதிக நிர்வாகிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். பதவிபோடும் போது நிர்வாகிகளிடையே வருத்தம் ஏற்படுவது இயல்பு தான். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வளிக்கப்படும். என்று நிர்மல் விளக்கமும் அளித்திருந்தார். தொடர்ந்து அஜிதா பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தவெகவில் கட்சி ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து விஜய் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர்களான சாமுவேல் ராஜ் என்பவரை நியமித்து விஜய் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொகுதி வாரியாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒட்டபிடாரம் தொகுதிக்கு மதன் ராஜ், கோவில்பட்டி தொகுதிக்கு பாலா, விளாத்திக்குளம் தொகுதிக்கு மகேஸ்வரன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் பதவி கேட்டு அஜிதா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த பதவி சாமுவேலுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு அஜிதா மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications