ஒரே போஸ்டர் தான்.. தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரை கதிகலங்க செய்த மர்ம ஆசாமிகள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலக சுவரில் ஒவ்வொரு சான்றிதழ் வாங்கவும் எவ்வளவு விலை என்று விலைப்பட்டியல் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுப்பட்டா வாங்க 1000 ரூபாயும், தனிப்பட்டா வாங்க 4000 ரூபாய், நத்தம் பட்டா வாங்க 8000 ரூபாய், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று வாங்க தலா 200 ரூபாய் சிலர் ஒட்டியிருக்கிறார்கள். இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சேவையும் பெற முடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக விஏஓ அலுவலகங்களிலும், சர்வேயர் ஆபிஸ்களிலும், தாசில்தார் அலுவலகங்களிலும், சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆர்டிஓ ஆபிஸ்களிலும், சில காவல் நிலையங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் சேவையை பெறுவது கடினமாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மக்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய வழக்கில் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பொறுத்தவரை, லஞ்சம் கேட்பதாக யார் மீது புகார் அளித்தாலும், அவர்களை பொறிவைத்து பிடித்து உறுதியாக கைது நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் தீபாவளி உள்பட முக்கியமான நாட்களில் லஞ்சம் புழங்குவதை தடுக்க தீவிர சோதனை நடத்துவார்கள். அதேபோல் அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு சென்று கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்வார்கள்..
அதேநேரம் சில ஊர்களில் லஞ்சத்திற்கு எதிராக புகார் அளிக்காமல் ஊழியர்களுக்கு எதிராக நோட்டீஸ் அடித்து ஓட்டுவதும் வழக்கம். சில ஊர்களில் வீடியோ எடுத்து அதிகாரிகளை மாட்டிவிடுவதும் வழக்கமாக உள்ளது. அதேநேரம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சான்றிதழ்கள் பெற கிராம நிர்வாக அலுவலகத்தில் விலைப்பட்டியல் ஒட்டியுள்ளனர்.சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஏஓவை பழிவாங்க இப்படி பெயர் பலகையை மர்ம நபர்கள் வைத்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு கிராம நிர்வாக அலுவலக சுவரில் நேற்று காலையில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, அடங்கல், கூட்டுப்பட்டா, தனிப்பட்டா, நத்தம் பட்டா, நத்தம் காலிமனை பட்டா ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்களில் பெறுவதற்கு ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இதன்படி கூட்டுப்பட்டா வாங்க 1000 ரூபாயும், தனிப்பட்டா வாஙக 4000 ரூபாய், நத்தம் பட்டா வாங்க 8000 ரூபாய், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று வாங்க தலா 200 ரூபாய், நத்தம் காலி மனை 10000, வாரிசு சான்றிதழ் 500, அடங்கல் 500, இறப்பு சான்றிதழ் வாங்க 300 ரூபாய் என விலைப்படியல் இருந்தது.
மேலும் கிராம நிர்வாக அலுவலரின் பெயர், செல்போன் எண்ணும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 'கூகுள்-பே' மூலம் பணம் பெறும் வசதியும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்டு இருந்த விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து உடனே தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையினர் விரைந்து சென்று, கிராம நிர்வாக அலுவல சுவரில் ஒட்டப்பட்டு இருந்த விலைப்பட்டியலை அகற்றினார்கள். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகனி கூறுகையில், "யாரோ மர்மநபர்கள் வேண்டுமென்றே, எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் விலைப்பட்டியலை ஒட்டியிருக்கிறார்ககள். அரசு விதிகளின்படியே அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது" என்றார். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications