விவசாய வேலைக்கு போன மூதாட்டி.. எதிர்வீட்டு சசிகலாவுக்கு வந்த பேராசை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விவசாய வேலைக்கு சென்ற மூதாட்டியின் கதவை உடைத்து நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25,000 பணத்தை திருடிச்சென்ற பக்கத்து வீட்டு சசிகலா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகம்மாள் (வயது 65). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். தினமும் அப்பகுதிகளில் உள்ள விவசாய வேலைகளுக்கு சென்று வருவார். காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லும் அவர் மதிய சாப்பாட்டை தூக்குவாளியில் கொண்டு செல்வார். பின்னர் மாலையில் தான் வீடு திரும்புவார்.

அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதியும் கனகம்மாள் விவசாய வேலைக்காக வழக்கம்போல் காலையில் சாப்பிட்டு விட்டு மதியத்திற்கு சாப்பாடு வைத்துக்கொண்டு சென்றார். வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான கனகம்மாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.மேலும் பீரோவில் இருந்த தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. 7 பவுன் தங்க நகை மாயமாகி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இதுகுறித்து ஓட்டபிடாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேக நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆனால் யார் வீட்டில் திருடியது என்பது தெரியாமல் இருந்தது. இதனால் போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒவ்வொருவராக விசாரித்தனர். அப்போது கனகம்மாள் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் ஆறுமுகசாமி என்பவரின் மனைவி சசிகலா (35) மட்டும் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சசிகலா தான் கனகம்மாள் வீட்டில் நகை மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவர் மறைத்து வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணத்தை போலீசார் மீட்டனர். எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணே கதவின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருட காரணம் என்ன என்றும், எதற்காக இந்த நகையை திருடினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சசிகலாவை கைது செய்த போலீசார் அவரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பின்னர் அவர் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications