குழந்தை பெற்ற 10 நாளில் தாய்க்கு நடந்த துயரம்.. கோவில்பட்டியில் கனவிலும் நடக்க கூடாத சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குழந்தை பெற்று 10 நாளில் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே துளசிங்க நகர் என்ற இடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருடைய மனைவி எலிசபெத் ராணி (வயது 21). கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எலிசெபத் ராணி கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில் பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 27 ஆம் தேதி அவருக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்தது.

அழகான ஆண் குழந்தை அவருக்கு பிறந்து இருந்த நிலையில், சிசேரியன் செய்யப்பட்டதால் எலிசெபத் ராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவருக்கு உதவியாக தாயார் ஜெபாவும் இருந்தார். இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் இரவு மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் உள்ள டாய்லட்டிற்கு எலிசெபத் ராணி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் எலிசபெத் ராணி திரும்பி வரவில்லை.
கழிவறைக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் பதறிய தாயார் ஜெபா, அவரை தேடி சென்றார். அப்போது கழிவறையில் இருந்து சத்தமும் வராததால் திறந்து பார்த்து இருக்கிறார். அப்போது கழிவறையில் எலிசபெத் ராணி வழுக்கி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதையடுத்து எலிசெபெத் ராணியை மீட்டு எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எலிசபெத் ராணி இறந்துவிட்டதாக கூறினர்.
இதனைக்கேட்டு தாயார் கண்ணீர் விட்டு கதறினார். இந்த நிகழ்வு மருத்துவமனையில் இருப்பவர்கலையும் கண்கலங்க வைத்தது. இதற்கிடையே மருத்துவமனையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் மற்றும் போலீசார், மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உயிரிழந்த எலிசபெத் ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற 10-வது நாளில் இளம்பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications