திருச்செந்தூரில் 100 ரூபாய்க்கு சொகுசு விடுதிகள்.. திறந்து வைத்தார் ஸ்டாலின்.. என்னென்ன வசதிகள்?
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ.5.81 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதேபோல் திருச்செந்தூரில் ரூ.100க்கு தங்கும் விடுதிகள் உள்ளிட்ட ரூ. 68.36 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி ஆகிய 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரூ.100 செலவில் தங்கி செல்ல முடியும். இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,226 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு. திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகளும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், 5,433.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 20,607 திருப்பணிகளில் 9,083 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48.36 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்திட்ட வரைவின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம். என மொத்தம் 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் திரு. பொ.பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. ஆர். அருள்முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications