தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு தீபாவளி வாழ்த்து கிடைக்காது.. சிரித்துக்கொண்டே சொன்ன தமிழிசை
தூத்துக்குடி: தமிழக அரசிடம் இருந்து உங்களுக்கு தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால் உங்கள் சகோதரியாக முன்பே உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அனைவருக்கும் வணக்கம். நான் முன்கூட்டியே உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் தமிழக அரசிடம் இருந்து உங்களுக்கு வாழ்த்து கிடைக்காது. அதனால் உங்கள் சகோதரியாக முன்பே உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்பகுதிக்கு வருவது என் தாய்வீட்டுக்கு வருவது போல உணர்வேன். எனவே ரொம்ப மகிழ்ச்சி. மிகவும் வருத்தமாக இருக்கக்கூடியது என்னவென்றால் எப்போதும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் தென் தமிழகம் சாதி பிரச்சினையால் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது தான்.. சமீபத்தில் தச்சநல்லூரை சேர்ந்த 2 இளைஞர்கள் அவர்கள் சாதியினை சுட்டிக்காண்பிக்கப்பட்டு அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக இருக்கிறது.
ஆகவே இப்போது தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தொடர் நிகழ்வுகள்.. முதலில் நாங்குநேரி.. அதன்பின்னர் வேங்கை வயல்.. தற்போது தச்சநல்லூர்.. குடிநீரில் மலம் கழிக்கப்படுவது, மனிதர்கள் மீதே சிறுநீர் கழிக்கப்படுவது.. இதெல்லாம் மிகவும் கவலையளிக்கக்கூடியது. இதில் எல்லாம் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் இது தான் பெரிய பிரச்சினை என்று நீட்டில் தான் எப்போதும் கவனம் செலுத்துகிறது.
மாணவர்கள் எல்லாரும் நீட்டிற்கு படிக்க தயாராகி விட்டார்கள். அதில் எதாவது பிரச்சினை என்றால் சட்ட ரீதியாக அனுகுங்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு இது தான் பிரச்சினை என்று அதனை பின்தொடர்ந்து வருகிறார்கள். உதயநிதி அவர்கள் நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன்.. நான் சொன்னது சொன்னது தான் என்று. சனாதனம் பற்றி பேசுகையில் இப்படி சொல்கிறார்.. நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது. இன்று சாதியக்கொடுமைகள் நடக்கிறது.
இதற்கு எங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நீங்க. இலங்கை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி இடம்பெறவில்லை என்று வருத்தப்படும் நீங்கள்.. இலங்கையில் உச்சக்கட்ட பிரச்சினை நடந்துகொண்டு இருக்கும் போது மத்தியில் காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்த நீங்கள் அப்போது இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்கு என்ன முயற்சி செய்தார்கள். என்ன தீவிரமான நடவடிக்கை எடுத்தீர்கள்..
இதையெல்லாம் பார்க்கும் போது இன்னும் அரசாங்கம் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்பதும் பலமுறை தவறியிருக்கிறார்கள் என்று தான். எய்ம்ஸ் பற்றி சொல்கிறார்கள்.. திருநெல்வேலி மெடிக்கல் கல்லூரியில் 300 கோடி ரூபாய் செலவில் ஸ்பெஷாலிட்டி பிளாக் அமைக்கப்பட்டது பிரதமர் மோடி வந்த பிறகு தான். எல்லாவற்றிலும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்து மத எதிர்ப்பு என்பதை தீவிரமான கொள்கையாகவே கொண்டு இருக்கிறார்கள்..
இது மாற்றப்பட வேண்டும் என்பது தான் எனது கருத்து. திருவண்ணாமலையில் கோவிலுடைய நகைகள் எல்லாம் வைக்கப்பட்டு உள்ளே பெரிய வணிக வளாகம் கட்டுகிறார்கள். இது ஏதும் வணிகமயமாக்கி கொண்டு இருப்பது தான். இதனால் நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்.. சொன்னா சொன்னது தான் என்று சொல்லாமல்.. மன்னிப்பு கேட்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதனால் அதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications