வேலூரில் பாஜக சார்பில் இவர்தான் போட்டியிடுகிறார்! நட்ட நடு மேடையில் அறிவித்த அண்ணாமலை
வேலூர்: வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் ஏ.சி.சண்முகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டசபைத் தொகுதியில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் ஒவ்வொரு முறையும் இந்த நடைப்பயணத்தின் போது பாஜகவின் சாதனைகளை விளக்கி வருகிறார். அந்த வகையில் வேலூரிலும் பிரசார வாகனத்தில் இருந்தபடியே பேசினார்.
அவர் பேசுகையில்: 2026 ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கொய்யாப்பழத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி புவிசார் குறியீடு அறிவிப்பார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் காமராஜர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்த காலத்தில் பல மாவட்டங்களில் அணைகள் கட்டப்பட்டன.
அதன் பிறகு வந்த முதல்வர்கள் யாரும் அவரை போல் செய்யவில்லை. அணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக மாறி மாறி பங்காளிகள் போல் சண்டை போட்டு கொண்டு வருகின்றனர். திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே போல் சட்டத்திற்கு புறம்பாக திமுகவினர் கல்குவாரிகளில் ரூ 200 கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டனர். மோடி ஆட்சி காலத்தில் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளார். குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்த பிறகு நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது.
இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். தாமரைச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிக எம்பிக்களை அனுப்புவோம் என ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது தமிழகத்தில் உள்ள உதிரி கட்சிகளுடன் போட்டியிடுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications