வேலூரில் காதலியுடன் சேர்ந்து.. 70 லட்சம் சம்பாத்தியம்.. இன்ஸ்பெக்டர் மகனுக்கு இறுதியில் ட்விஸ்ட்
வேலூர்: காதல் ஜோடிகள் வாழ்க்கையில் குறுக்குவழியில் முன்னேற ஆசைப்பட்டதால் இன்று சிக்கலில் சிக்கியுள்ளார்கள். ஒரு லட்சம் போட்டால் இரண்டு லட்சம் என்று வழக்கமான பாணியில் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி உள்ளார் ஒரு இளைஞர்.. தனது காதலிக்காக டிரேடிங் கம்பெனி ஆரம்பித்த இன்ஸ்பெக்டரின் மகன், சுமார் 70 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கைதாகி உள்ளனர்.
மக்களை ஏமாற்றுவதற்கு பலரும் பல்வேறு வழிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியாக ஒரு சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நித்திஷ்க்கு 25 வயது ஆகிறது. இவர் டிகிரி முடித்து விட்டு எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சமூக வலைத்தளங்களில் பார்த்து வந்துள்ளார்.

பணம் முதலீடு
ஒரு கட்டத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ஷேர் மார்க்கெட் என்று பல விதமான பெயர்களை பயன்படுத்தி பணத்தை முதலீடு செய்ய வைத்தாராம். அவரது அப்பா இன்ஸ்பெக்டர் என்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்பி பணத்தை முதலீடு செய்தார்கள். காவல் ஆய்வாளரின் மகன் நம்பகத்தன்மையோடு பேசியதால் அதை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்தார்களாம்.
மோசடி
அந்த வகையில் நித்திஷ்குமாரின் பள்ளி தோழனான சந்தோஷ்குமார் அவர்களது நண்பர்களான விக்னேஷ், வித்யா சாகர், பிரேம்குமார் உள்ளிட்ட மூன்று நபர்களிடம் நித்திஷ்குமார் பல லட்சம் பணம் வாங்கினாராம். ஆனால், பல மாதங்களாகியும் அவர் கூறிய படி முதலீடு செய்த யாருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை.
காதல் பழக்கம்
நித்திஷ்குமார் மோசடி செய்வதை அறிந்த அவரது நண்பர் சந்தோஷ்குமார் உட்பட 3 பேரும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பட்ட படிப்பு படித்த நிதிஷ்குமார் டெல்லி சென்று யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆயத்தம் ஆகி உள்ளார். அங்கு அவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளார்களாம்.
காதலிக்காக கம்பெனி
காதலிக்காக "Galaxy Trade" என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்தாராம் நித்தீஷ். அதில் நிர்வாக இயக்குநராக அஞ்சனாவை அமர வைத்தாராம். நித்திஷ்குமாரும் - அஞ்சனாவும் சேர்ந்து ஒன்றுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லி பலரிடம் பணம் வசூல் செய்து, சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்களாம். பணத்தை சொன்னபடி திருப்பிக் கொடுக்காததால் முதலீடு செய்தவர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
தாய், மகன் கைது
இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நித்திஷ்குமாரை தேடி ஆம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நித்திஷ்குமார் வீட்டில் இல்லை. சென்னை சென்றிருந்தாராம். அதேநேரம் பண மோசடி வழக்கில் நித்திஷ்குமாரின் தாய் மாலதிக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் சென்னையில் இருந்து நிதிஷ்குமார் திரும்பி வந்த நிலையில், அவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த நித்திஷ்குமாரின் காதலி அஞ்சனா தலைமறைவாக இருக்கிறாராம். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications