வேலூர் அருகே திருவிழாவில் தலித்துகள் வழிபட்டதால் கோவிலை இடித்து தள்ளிய இடைநிலை சாதியினர்
வேலூர்: வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே கெம்மன்குப்பம் கிராமத்தில் பட்டியல் இன சமூகத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்றதற்காக, காளியம்மன் கோவிலை மற்ற இடைநிலை சாதியினர் சேர்ந்து இடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலித்துகளின் புகார்கள் அடிப்படையில் ஒருவர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கேவி குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே கெம்மன்குப்பம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வன்னியர்கள், யாதவர்கள், செட்டியார்கள், நாயுடுக்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் நடைபெறும்

காளியம்மன் கோவிலின் ஆடி மாத விழாக்களில், பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்ற மற்ற சாதியனர் சேர்ந்து முடிவெடுத்தார்கள். ஊர் கட்டுப்பாடாக இதனை அறிவித்தார்கள். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் மீறியதால், கடந்த வாரம், கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள கெம்மன்குப்பம் கிராமத்திற்கு அருகிலுள்ள காளியம்மன் கோவிலை குறிப்பிட்ட சாதி இந்துக்கள் இடித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் தலித்துகள் புகார் அளித்த நிலையில், ஒரு வார காலத்தாமதத்திற்கு பிறகு கே.வி.குப்பம் போலீஸார், குறிப்பிட்ட இடைநிலை சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, சமீபத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 14 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே கெம்மன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த எஸ் நவீன் குமார் என்பவர்(புகார் அளித்தவர்களில் ஒருவர்), பிரபல ஆங்கில செய்தித்தாளான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் தலித்துகள், சுமார் 50% மக்கள்தொகை இருக்கிறார்கள். அந்த கோவிலில் உள்ள தெய்வதை பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். காலப்போக்கில் மற்ற சாதியினர் கோவிலில் வழிபடத் தொடங்கினர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் தலித்துகள் பாகுபாடுகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
எங்கள் கோயில் தெய்வத்தை ஆரம்பத்தில் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசின் புறம்போக்கு நிலத்தில் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்திருந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, குலதெய்வத்தைச் சுற்றி ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டது. கோவிலை கட்டுவதற்கு நாங்கள் (தலித்துகள்) பணம் மற்றும் பொருளை அளித்துள்ளோம். ஆனால் குறிப்பிட்ட சாதிக்களைச் சேர்ந்த இந்துக்கள், கோயில் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள். கோயிலின் புதிய கட்டிடத்தின் கும்பாபிஷேகத்திற்கு எங்களை அழைக்கவில்லை.எங்கள் கிராமத்தில் எங்களுடன் வன்னியர்கள், யாதவர்கள், செட்டியார்கள் மற்றும் நாயுடுக்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கிறார்கள்.
தமிழ் மாதமான ஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆடி மாத விழா நடத்தப்பட்டது. இதில் தலித்துகள் விலகி இருக்க வேண்டும் என்று ஊரில் உள்ள இடைநிலை சாதியினர் வெளிப்படையாகக் கூறினார்கள். எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ள லோகநாதன் என்பவர், தன்னை ஒரு ஊடகவியலாளர் என்றும் கோவிலை உருவாக்க தானே காரணம் என்றும் கூறினார். அத்துடன் காளியம்மன் தனது கனவில் தோன்றி தலித்துகளை ஒதுக்கி வைக்குமாறு அறிவுறுத்தியதாக கிராம மக்களிடம் கூறினார். மற்ற சாதியினர் அவரது பேச்சை ஆதரித்தனர்" இவ்வாறு வேதனையுடன் நவீன் கூறினார்.
மற்றொரு தலித் இளைரான பரத் கூறுகையில், "நாங்கள் வழக்கமாக எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாட்டங்களை ஆரம்பிப்போம். பின்னர் கிராமத்திற்கு வெளியே உள்ள காளியம்மன் கோவிலில் பொங்கல் சமைப்போம். ஆனால் சமீபகாலமாக நாங்கள் கோயிலில் சாமியை வழிபடுவதில் சாதி இந்துக்களால் பாகுபாடுகளை சந்தித்து வருகிறோம். கடந்த ஆண்டு, எங்கள் தெருக்களில் நாங்கள் நடத்த இருந்த கோவில் ஊர்வலத்தை கூட சாதி இந்துக்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
தலித்துகளை ஒதுக்கி வைக்கும் முடிவை சாதி இந்துக்கள் எடுத்த பிறகு,எங்கள் சமூகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு கே.வி.குப்பம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இதனிடையே ஆகஸ்ட் 2ம் தேதி, தலித்துகள் சாதி இந்துக்களை மீறி, காளியம்மன் கோவிலில் பொங்கல் சமைத்து கொண்டாடினர். இந்த நிகழ்வை சாதி இந்துக்கள் புறக்கணித்தார்கள். இதன்பின்னர் ஆகஸ்ட் 6 அன்று, கோவில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோதிலும், சாதி இந்துக்களின் ஒரு பிரிவினர் கோவிலை ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி இடித்து சிலையை எடுத்துச் சென்றார்கள் " இவ்வாறு கூறினார்.
இதனிடையே தலித் மக்கள் அளித்த புகாரில், அன்று டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் கோயிலை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டி டிஎஸ்பி ரவிச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்தார் . இதனிடையே அந்த கிராமத்தினர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட காளிம்மன் கோயில் லோகநாதன் என்பவரால் மட்டுமே கட்டப்பட்டது . தலித்துகள் கோயிலுக்குள் நுழைந்து வழிபடுவதில் தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் கோயில் திருவிழாவை ஒன்றாகக் கொண்டாட விரும்பவில்லை என்றார்கள்.
லோகநாதன் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கிராம பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "இருதரப்பினரும் முன்வந்தால், கோவில் திருவிழாவை நடத்த தயாராக உள்ளோம்" என்றார்.இதனிடையே இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குடியாத்தம் வருவாய்த்துறை அதிகாரிகள், இரு சமூகத்தினரிடமும் சமாதானக் குழுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications