2 லட்சம் பணம் மற்றும் விருது.. செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள்.. விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி?
வேலூர்: இயற்கை வேளாண்மையின் தந்தை' என அழைக்கப்படும் நம்மாழ்வார் நினைவாக, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு 'விவசாயி நம்மாழ்வார் விருது' வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதிலும், நிலைநிறுத்துவதிலும் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையுடன் அரசு வழங்க உள்ளது. இதற்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றி வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.
2025-2026-ம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் தமிழகஅரசு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவித்தது. உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற விவசாயிகளும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடச் செய்யும் விவசாயிகளுக்கும் நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவித்து பிற விவசாயிகளும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட செய்யும் விவசாயிகளுக்கும் நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கி தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு, பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண் வளத்தையும் பாதுகாப்பதாகும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.
3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிக்கான நம்மாழ்வார் விருது மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம், பதக்கம், சான்றிதழ் ஆகியவை முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் அக்ரிஸ்நெட் என்ற இணையதளத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications