ராணிப்பேட்டையில் மருமகனை போட்டுத் தள்ளிய மாமனார்.. 4 மாதம் கழித்து சிக்கியது எப்படி?
வேலூர்: ராணிப்பேட்டை அருகே காவேரிப்பாக்கத்தில் மருமகனை கொலை செய்த வழக்கில் 4 மாதங்களுக்கு பிறகு மாமனார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பக்கத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி மரம் வெட்டும் தொழிலாளியான 45 வயதாகும் சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஜோதி (41). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதால் இரண்டாவதாக சரவணனை திருமணம் செய்திருந்தார். ஜோதிக்கு மூன்று ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

கடந்த டிசம்பரில் நடந்த கொலை தொடர்பாக கடப்பேரி கிராம நிர்வாக அலுவலர் சிவரஞ்சனி புகார் அளித்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சரவணன் கொலைக்கான காரணம், கொலையாளி பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிலை இருந்தது.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த நான்கு மாதங்களாக, கொலையாளி பற்றிய விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.. ஏனெனில் திட்டமிட்டுக் கொலை செய்தற்கான தடயங்கள் எதுவும் அப்போது கிடைக்கவில்லை.
இதனிடையே காவேரிப்பாக்கத்தை அடுத்த வாணிச்சத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பாற்கடல் கிராமத்தில் கொலைசெய்யப்பட்ட சரவணனின் மாமனார் பாண்டியன் (58) என்பதும், சரவணன் கொலையில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த டிசம்பர் 23ம் தேதி அன்று சரவணனும், அவரது மாமனார் பாண்டியனும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பாண்டியன் வைத்திருந்த கத்தியால் சரவணனை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருமகனை கொலை செய்த மாமனார் 4 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications