ஊழல் லஞ்சம் ஒழியும்னு சொன்னீங்க.. அப்போ ஏன் அமலாக்கத்துறை ரெய்டு போகுது? மத்திய அரசை சாடிய சீமான்
வேலூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
வேலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- முத்துராமலிங்க தேவர் சொல்வது என்னவென்றால், நீ ஊமையாக இருக்கிற வரை உன்னை ஜனநாயகவாதி என்று சொல்வாங்க.. நீ உரிமை என்று பேசிவிட்டால் உன்னை தேசத்துரோகி என்று சொல்வாங்க.. என்றார்.. இந்த நிலம் அடிமைப்பட்டு கிடக்கும்போது இந்த நாட்டு விடுதலைக்கு நாங்க போராடியிருக்கிறோம்..

செக்கு இழுத்திருக்கோம்.. சிறை சென்றிருக்கோம்.. தூக்கில் தொங்கியிருக்கிறோம்.. நாடெங்கிலும் போராட்டம் நடந்தது. பாகிஸ்தான், வங்காளதேச இஸ்லாமிய மக்கள் கூட இங்கே வந்து மண்ணின் விடுதலைக்காக போராட்டம் செய்தார்கள்.. மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆர்எஸ்எஸ், பிஜேபி போராட்டம் செய்தார்களா?.. பகத்சிங் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க முடியாது என்று தூக்கில் தொங்கினார். அது வீரமா..
எல்லாமே தவறு: சுபாஷ் சந்திரபோஷ் நாட்டின் விடுதலைக்கு ராணுவத்தை கூட்டி போராட்டம் நடத்தினார். இது வீரமா.. இல்லை ஆங்கிலேயருக்கு 2 முறை மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் செய்தது வீரமா.. இங்கே எல்லாம் கட்டமைக்கப்படுகிறது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார் காமராஜர். அவருடைய பேரன் தானே நாங்கள் எல்லாம். எல்லாமே தவறு.. பண மதிப்பிழப்பு தவறு.. ஜிஎஸ்டி தவறு.. புதிய கல்விக்கொள்கை தவறு..
ஜிஎஸ்டி வரி எதற்கு?: புதிய கல்வி கொள்கையில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் இருக்கு.. நிலையான அறம்.. மனுதர்மம்.. நீங்க என்ன பேசுகிறீர்களோ அதை தான் எங்க குழந்தைக்கு சொல்கிறீர்கள்.. பெண்ணிய விடுதலையில் ஹிஜாப் அணிய கூடாது என வருகிறது. உங்களுக்கு ஒரு மத நம்பிக்கை இருக்கிறது அல்லவா.. பூநூல் அணியாமல் இருக்க முடியுமா.. பள்ளி, கல்லூரி செல்லும்போது பூநூல் அணியாமல் போக முடியுமா?.. எதையாவது ஒன்னு சொல்ல வேண்டியது..

ஜிஎஸ்டியால் இதுவரை என்ன நடந்தது. சரக்கு மற்றும் சேவை வரியால் இந்த நாடு வளர்ந்தது எவ்வளவு?... நாட்டின் நிதி அமைச்சரிடம் ஜிஎஸ்எடி வரியால் இவ்வளவு நிதி வந்துள்ளது என்று சொல்ல முடியுமா.. உப்புக்கு வரி, இட்லிக்கு வரி, சட்டைக்கு வரி.. இப்படியே எதுக்கு எல்லாம் வரி.. ஒரு மாட்டிடம் பால் கறக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொடுக்க வேண்டும், தவுடு வைக்கவேண்டும், புண்ணாக்கு வைக்க வேண்டும்.. வைக்கோல் போட வேண்டும்..
ஊழல் ஒழிஞ்சுதா?: ஒன்னும் போடாமால் பாலை மட்டும் கறந்துகொண்டே இருந்தால் என்ன செய்யும்.. மாடு செத்து போகும்.. அப்படித்தான் நீங்க இங்க பண்றீங்க.. பணம் செல்லாது என்று சொல்லும் போது மோடி சொன்னது ஞாபகம் இருக்கிறதா?.. ஊழல் லஞ்சம் ஒழியும் என்றார்களே.. தீவிரவாதம் ஒழியும் என்றாரே.. ஆனால் அதுக்கப்புறம் தானே புல்வாமா தாக்குதல் நடந்தது.
ஊழல் ஒழிஞ்சுதா? பிறகு ஏன் அமலாக்கத்துறை ரைடு வருகிறது. ஓட்டுக்கு ஆயிரம் ஆயிரமாக காசு கொடுப்பதெல்லாம் எங்க இருந்து வருகிறது. பணமதிப்பிழப்பால் மக்கள் எவ்வளவு அல்லல் பட்டார்கள்.. அதற்கு வருத்தம் தெரிவித்தீர்களா?.. இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications